07/09/2023 (915)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
பிறர் கூறும் சொல் எதுவாக இருக்க வேண்டும்? என்ற கேள்வியோடு நிறுத்தியிருந்தோம்.
அதற்குப் பதிலாகச் சொல்கிறார்: தன் மகனைச் சான்றோன் என பிறர் சொல்லக் கேட்க வேண்டும் என்கிறார். காண்க 12/04/2021 (85).
“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.” --- குறள் 69; அதிகாரம் - புதல்வரைப் பெறுதல்
இது கேட்டுக் கொண்டே இருக்கட்டும் என்ற எண்ணத்தில் தீட்டியக் குறள்தான் 68 ஆவது குறள். காண்க 07/03/2021 (49).
“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.” --- குறள் 68 அதிகாரம் – புதல்வரைப் பெறுதல்
நாம் அடுத்துப் பார்க்கப்போவது விருந்தோம்பலில் விடுபட்டக் குறள்களை.
இல்லறவியலை இல்வாழ்க்கையில் (5 ஆவது அதிகாரம்) தொடங்கி, அதை தொடர்ந்து அதற்கு முக்கியமான ‘வாழ்க்கைத் துணை நலம்’, அது விரிந்து ‘புதல்வரைப் பெறுதல்’, அதனால் வரும் ‘அன்புடைமை’, அது மேலும் வளர்ந்து ‘விருந்தோம்பல்’, அந்த விருந்தினை நிலை நிறுத்த ‘இனியவை கூறல்’ என்று ஒரு திரைக் கதையை அமைப்பது போன்றது அதிகாரங்களின் அணிவகுப்பு. இதனை பல முறை நினைவு கூர்ந்து மகிழ்ந்திருக்கிறோம்.
விருந்தோம்பல் என்பது நாம் உண்ணும்போது புதியவர் வந்தால் பகுத்து உண்ணவேண்டும் என்கிறார் மணக்குடவப் பெருமான். இதுதான் அன்புடைமைக்கு இலக்கணம் என்கிறார் பரிமேலழகப் பெருமான்.
இல்லறம் என்று நடத்தத் துணிந்துவிட்டாயா தம்பி, அதனைச் சிறப்பாக்க பொருள்களை ஈட்டி காக்கின்றாயா? அப்படித்தான் இருக்க வேண்டும். அதுதான் சரியும்கூட தம்பி. ஆனால் இதெல்லாம் எதற்குப் பயன்படவேண்டும் தெரியுமா?
நம்மை நாடி வரும் விருந்தினர்களுக்கு உதவி செய்யப் பயன்பட வேண்டும்.
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.” --- குறள் 81; அதிகாரம் – விருந்தோம்பல்
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் = வாழ்க்கைத் துனையோடு இல்லறத்தில் இருந்து பொருள்களை ஈட்டி, காத்து வாழ்வது எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு = வரும் விருந்தினர்களுக்கு உதவிகள் செய்து பேணுவதற்காக.
வாழ்க்கைத் துனையோடு இல்லறத்தில் இருந்து பொருள்களை ஈட்டி, காத்து வாழ்வது எல்லாம் வரும் விருந்தினர்களுக்கு உதவிகள் செய்து பேணுவதற்காக.
வேளாண்மை என்றால் வேள் + ஆண்மை என்று பிரியும். இதன் விளக்கத்தை நாம் முன்பு பார்த்துள்ளோம். காண்க 11/04/2021 (84).
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Kommentare