15/04/2022 (413)
‘உள்ளியது எல்லாம்’ என்று ஆரம்பிக்கும் 309 வது குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். அதாவது, நினைத்தது எல்லாம் நினைத்தபடி கிடைக்கனும் என்றால் வெகுளாமை வேண்டும் என்று சொல்லியிருந்தார். காண்க 01/12/2021 (281), 12/02/2022 (351)
இப்போ, முடிவுரையாகச் சொல்லப் போகிறார் கடைசிக் குறளில்.
வார்த்தைகளில் விளையாடுகிறார்.
சினம் அதிகமானால் அறிவு கெடும். அறிவு மனித உயிரின் குணம். அது கெட்டால், அவர்களுக்கு உயிர் இருந்தாலும் அது இல்லைதான். அதனாலே சீரியாஸா (serious) சினத்தைப் பிடிச்சுட்டு இருப்பவங்களை ‘இறந்தார்’என்றே சொல்கிறேன் என்று அறிவிக்கிறார்.
அளவிறந்த (அளவு + இறந்த) செல்வம் என்றால் அதாவது அளவுக்கு அதிகமான செல்வம். அப்போ ‘இறந்த’ என்ற சொல்லுக்கு மிக அதிகம் என்று பொருள் ஆகிறது.
சினம் இறந்தவர்கள் என்றால் சினம் மிக்கவர்கள் என்று பொருள். ஆகையினால், அவர்களை ‘இறந்தார்’ என்றே குறிக்கிறார் அதிகமாக சினத்தைக் கொண்டவர்கள் என்ற பொருளில்.
அதே போல, சினத்தைத் துறந்தாரை ‘துறந்தார்’ என்றே குறிப்பிடுகிறார்.
துறந்தார் என்பவர்கள் பற்றுகளைத் துறந்து ஞான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளவர்கள் என்பது வழக்கமானப் பொருள்.
‘துணை’ என்ற சொல்லுக்கு ‘ஒப்பு’ என்ற பொருளும் இருக்காம்.
இப்போ, குறளைப் பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன்.
“இறந்தார் இறந்தார் அணையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.” --- குறள் 310; அதிகாரம் – வெகுளாமை
(சினம்) இறந்தார் = சினத்தில் மிக்கார்; இறந்தார் = உலகை விட்டு நீங்கியவர்கள்; அணையர் = ஒப்பானவர்கள்; சினத்தைத் துறந்தார் = சினத்தைத் துறந்தவர்கள்; துணை = ஒப்பாவார்கள்
சினம் அதிகமாக இருப்பவர்கள் இறந்தவர்களுக்கு ஒப்பாவார்கள். சினத்தைத் தவிர்த்தவர்கள் ஞானம் பெற முனைந்து நிற்கும் துறந்தவர்களுக்கு ஒப்பாவார்கள். அப்பாடா, ஒரு மாதிரி சொல்லி முடிச்சுட்டேன்.
இது வரைக்கும், கோபம் வராமால் பொறுமையாக படிச்சதாலே நீங்களும் இன்று முதல் ‘துறந்தார்கள்’ என்றே அழைக்கப்படுவீர்களாக!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments