top of page
Search

இற்பிறந்தார், நல்குரவு ... 1044, 1045

27/01/2022 (336)


சொல் என்ற சொல்லை அதிகமாகப் பயன்படுத்துகிறார் நல்குரவில் நம் வள்ளுவப்பெருமான்.


இல்லாமையால் பிறக்கும் சொல் இரண்டு வகைச் சோர்வை உண்டாக்கும். பிறர்க்கு உண்டாக்கும் சோர்வு, இல்லாதவரிடமே உண்டாகும் சோர்வு.


சொல் எல்லாம் செய்யும் வறுமையில் இருந்தால். பிறர் சொல்லும் சாதாரணச் சொற்களும் சுடு சொற்களாய் மாறும். அது எதிர்வினை உண்டாக்கி இழி சொற்களைச் சொல்லத் தூண்டும். அது பிறரிடம் ஒரு சோர்வை உண்டாக்கும். பிறரை அண்டவிடாது. அது ஒரு கீழ்நோக்கித் தள்ளும் திருகுச்சுழல் (Downward Spiral).


தொல்வரவு பயன் இல்லாமல் போகும். நல்ல பண்பு நிறை குடும்பத்தில் இருந்து வந்தாலும், வறுமை எனும் பாவியால், அவர்களின் வாயில் இருந்து வெட்கத்தைவிட்டு மற்றவர்களிடம் இரக்க, யாசிக்க வைக்கும் இழி சொற்கள் பிறக்கும். இது அவர்களிடமே ஒரு சோர்வை உண்டாக்கும். இது மற்றொருவகை சோர்வு.


குறளைப் பார்க்கலாம்:


இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொல்பிறக்கும் சோர்வு தரும்.” --- குறள் 1044; அதிகாரம் – நல்குரவு


இன்மை = இல்லாத கொடுமையால்; இற்பிறந்தார் கண்ணேயும் = நல்ல பண்பு வழி வந்து இருப்பினும்; இளிவந்த சொல்பிறக்கும் = இழிவான சொல் பிறக்கும்; சோர்வு தரும் = அது தளர்ச்சியை உருவாக்கும்.


‘நல்குரவு’ என்பது ஒரு கொடுமைதான் என்று நினைத்துவிடக் கூடாதாம், அதற்குள் பல கொடுமைகளும் அடங்கி இருக்காம்.


நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்.” --- குறள் 1045; அதிகாரம் – நல்குரவு


நல்குரவு என்னும் இடும்பையுள் = இல்லாமை என்ற ஒரு துன்பத்துள்ளே; பல் துன்பங்கள் சென்றுபடும் = பல துன்பங்களும் வந்து தங்கும்; குரை = அசை நிலை (பொருள் இல்லை)


என்ன கொடுமைகள் சரவணா இது? என்பது போல நல்குரவால் வரும் கொடுமைகளை முதல் ஐந்து குறள்கள் மூலம் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நம் பேராசான்.


வருமுன் காக்க என்பதுதான் பேராசானின் எண்ணம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)






30 views4 comments
Post: Blog2_Post
bottom of page