இல்பிறந்தார் கண்அல்லது ... குறள் 951
23/07/2022 (512)
‘அம்’ என்றால் அழகு என்று பொருள். ‘அம்’மா என்றால் அழகானவள்! எத்தனை அம்மாக்கள் ஒருவருக்கு இருக்க முடியும்? ஒருவருக்கு ஒரு அம்மாதான் இருக்க முடியும். பல தாய்கள் அமையலாம். செவிலித்தாய், வளர்ப்புத்தாய், வாடகைத்தாய் என்று! அம்மா என்றால் ஒருத்திதான்! அம்மான்னா சும்மாவா?
‘கயல்’ என்றால் மீன். அதுவும் கெண்டை மீன். கெண்டை மீனின் கண்கள் எடுப்பாக இருக்குமா? இருக்கலாம்!
அம் +கயல் +கண்ணி = அங்கயற்கண்ணி. அங்கயற்கண்ணி என்றால் அழகான கெண்டை மீன்களின் கண்களைப் போல கண்களை உடையவள்.
‘இல்’ என்றால் குடியிருக்கும் இடம், வீடு. ‘இல்லம்’ என்றால் அழகான வீடு, இடம். இல்லம் என்பது காரணப் பெயர். நாற்காலியில் ஒரு கால் இல்லாமல் போனால் அது முக்காலி!
அமைதியும், நிறைவும் இருந்தால்தான் அது இல்லம். இல்லையென்றால் அது ‘அம் இல்’ ஆகிவிடும். ஆதாவது, அழகில்லை என்றாகிவிடும். ‘இல்’ என்றால் இல்லை என்றும் பொருள்.
இல்லத்தை சுருக்கமாக (abbreviation) ‘இல்’ என்றும் குறிக்கிறார்கள். ஒரு சமுதாயத்தின் அடிப்படை அலகு(unit) இல்லம் அல்லது குடும்பம்.
சரி, என்ன இன்றைக்கு சொல்லாராய்ச்சி என்றுதானே கேட்கிறீர்கள். இதோ வருகிறேன்.
மனிதர்கள் தனிப்பட்ட முறையில் இணைந்து வாழ்வது குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்தது குடி; பல குடிகளை உள்ளடக்கியது குலம். பல குலங்களை உள்ளடக்கியது நாடு … இப்படி விரிகிறது. இது நிற்க.
ஒரு குடும்பத்திற்கு அடிப்படை பண்புகள் யாவை? என்ற கேள்வியை நம் பேராசானிடம் ‘நம்மாளு’ கேட்டார்.
அதற்கு, ஐயனின் பதில் என்னவென்றால் அவர்களிடம் இரண்டு பெரும் பண்புகள் காணப்படுமாம். ஒன்று, அவர்களிடம் ஒரு ஒழுங்கு அதாவது நடுவுநிலைமையாக இருப்பது. மற்றொன்று, பழிக்கு அஞ்சுவது. இது இரண்டும் ஒரு சேர அமைந்து இருந்தால், அந்த இடத்தை இல்லம் என்று குறிக்கலாமாம்.
“இல்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.” --- குறள் 951; அதிகாரம் – குடிமை
செப்பமும் நாணும் ஒருங்கு = செம்மையும், நாணமும் ஒரு சேர அமைந்து இருப்பது; செப்பம் = செம்மை= ஒழுங்கு, நடுவுநிலைமை; நாணம் = பழிக்கு அஞ்சுவது; இல்பிறந்தார் கண் அல்லது இல்லை இயல்பாக = அழகான, நல்ல குடும்பத்தில் தோன்றியவர்களுக்கு அந்த பண்புகள் இயல்பாக அமையும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
