top of page
Search

இல்லாளை அஞ்சுவான் ... 905, 41, 428

01/06/2022 (460)

மனையாளை அஞ்சும் மறுமையிலாளன் வினையான்மை எய்தல் அரிது என்றார் குறள் 904ல். தனக்கு உரித்தான செயல்களைச் செய்து பெருமை எய்த முடியாது என்று குறிப்பிட்டார்.


அடுத்துவரும் பாடலில், நல்லோர்களுக்கு உதவுவதும், துணையாக இருப்பதும்கூட இயலாது என்கிறார்.


இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல்.” --- குறள் 905; அதிகாரம் – பெண்வழிச்சேறல்


இல்லாளை அஞ்சுவான் = இல்லாளுக்கு அஞ்சுபவன்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் = தான் உதவக் கடமைப்பட்டவர்களுக்கும் செய்யவேண்டிய நல்ல செயல்களையும் செய்ய அஞ்சுவான். அதாவது, செய்ய மாட்டான். மற்று = அசை நிலை – பொருள் கிடையாது


இதில்கூட “அஞ்சுவான்’ என்றுதான் சொல்லியிருக்கிறார். அஞ்ச வைக்கப்படுவான் என்று சொல்லவில்லை! இதைக் கவனிக்க வேண்டும். எல்லாமே ஒரு மன நிலைதான்.


இல்வாழ்க்கை என்ற அதிகாரம் இல்லறவியலில் முதல் அதிகாரம். அதில் முதல் பாடல், ஏற்கனவே பார்த்ததுதான். மீள்பார்வைக்காக காண்க 26/02/2021 (40).


“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை” ---குறள் 41; அதிகாரம் – இல்வாழ்க்கை


இல்வாழ்வான் என்பான்= இல்லறத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்; இயல்புடைய மூவர்க்கும் = ஏனைய மூன்று பருவத்தார்க்கும்; நல்லாற்றின் = (அவர்களின் அறத்துடன் கூடிய)நல் வழிக்கு; நின்ற துணை = நிலைத்து நிற்கின்ற துணை.


அதாவது, இல்லறமே மற்றவர்களுக்குத் துணையாக இருந்து, அதனால் தானும் உயர்வதுதான். அடிப்படையே ஆட்டம் கண்டால் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.


சரி, மனையாளிடம் அஞ்சவேக் கூடாதா என்றால் அதுவுமில்லை. அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச வேண்டும். அதுதான் அறிவுடைமை. நான் சொல்லலைங்க நம் பேராசானே சொல்கிறார்.


அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.” --- குறள் – 428; அதிகாரம் – அறிவுடைமை


அஞ்சுவது அஞ்சாமை பேதைமை = அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பது பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் = அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதுதான் அறிவுடையார் செய்கையாகும்.


அஞ்ச வேண்டியது: பழி, பாவம், கேடு முதலானவற்றைத் தரும் செயல்கள்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )




6 views1 comment
Post: Blog2_Post
bottom of page