இல்லாள்கண் தாழ்ந்த ... குறள் 903
28/05/2022 (456)
திருமண ஒப்பந்தம் அல்லது வாழ்க்கை ஒப்பந்தம் என்பது இல்லறம் இனிது நடக்க ஏற்படுவது. அதிலே, அன்பு என்பதுதான் அடிப்படை. அடிமைத்தனம் என்பது விதிவிலக்கு.
பெண்ணடிமைத்தனம் என்பது கண்டனத்திற்கு உரியது. ஆணடிமைத்தனம் என்பது நாணுதலுக்குரியது.
அந்தக் காலத்தில் பெண் அடிமைத்தனம் இருந்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அப்போதே ஆணடிமைத்தனமும் இருந்திருக்கிறது என்பதை உணர்த்தும் வகையிலே இருப்பதுதான் இந்த அதிகாரம்.
ஒருவரை அடிமைபடுத்தி நம் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் பிறவி குணம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. மனைவிக்கு கணவன் தன் சொற்படி நடக்க வேண்டும்; கணவனுக்கு மனைவி தான் சொல்வதைத் தட்டக்கூடாது என்பது விருப்பம்; பெற்றோர்களுக்கு, பிள்ளைகள் தன் சொல்பேச்சு கேட்கும் பதுமைகளாக இருக்க வேண்டும் என்பது எண்ணம். இப்படி ஒருவரை ஒருவர் எப்படியாவது அடக்கி வைக்க வேண்டும் என்பது ஆழ் மனதில் இருக்கும் அவாவாகவே இருக்கின்றது.
இந்த உலகில் நாம் ஒரு கருவிதான் என்று நினைப்பதை விட்டு விட்டு, நாம்தான் அனைத்திற்கும் காரணம் என்று கருதிக்கொண்டு அடக்கி ஆளநினைப்பது அவலங்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
அதன் உச்சமாக, நாசீசிச ஆளுமைக் குறைபாடு (narcissistic personalty disorder- NPD) என்ற மனப் பிறழ்வு ஏற்படுகிறன்து. இது குறித்து பல ஆய்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. தேடிப் படித்தால் தெளிவடையலாம்.
நாசீசிச ஆளுமைக் குறைபாட்டின் அறிகுறிகள்: விறுவிறுப்புடன் செயல்படுவார்கள்; அதிக பாராட்டுகள் வேண்டும் என விரும்புவார்கள்; அலட்சியமாக இருப்பார்கள்; அனுதாபம் என்பது கடுகளவும் இருக்காது; அகந்தை, அதிகாரம், அடக்குமுறை, கட்டுப்பாடு அவர்களின் மற்ற இயல்புகள். இந்தக்குறைபாடு உள்ளவர்கள் மற்றவர்களுடைய உணர்ச்சிகளையும் விருப்பங்களையும், சாதனைகளையும் வெளிப்படையாகப் புறக்கணிப்பார்கள்; விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை இருக்காது. இப்படிப் பல. இவர்களோடு இணைந்து இருப்பது ஒரு நரகம்.
இல்லறத்தில் குழப்பம் வந்துவிடக் கூடாது என்று விட்டுக் கொடுக்கப் போய் பாதிக்கப் படுபவர்கள் தங்களைத்தாங்களே பலியிட்டுக் கொண்டிருப்பார்கள்.
சரி, இதற்கும் குறளுக்கும் என்ன சம்பந்தம்?
வள்ளுவப் பெருமான் என்ன சொல்கிறார் என்றால் இல்லாளிடம் அடக்கம் இல்லை என்றால் அது எப்போதும், மற்றவர்கள் மத்தியில் தலை குனிவைத் தரும் என்கிறார். அதுவும் ஒருவரை அழிக்கும் பகை என்கிறார்.
“இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.” --- குறள் 903; அதிகாரம் - அதிகாரம் – பெண்வழிச்சேறல்
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை = இல்லாளிடம் அடக்கம் இல்லை என்றால்;
எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும் = அது எப்போதும் மற்றவர்கள் மத்தியில் தலை குனிவைத் தரும்
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
