இளைதாக முள்மரம் கொல்க ... 879
01/09/2023 (910)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
எதையாவது சுத்தம் செய்கிறோம் என்றாலே எனக்கு ஓவ்வாமைதான். அதற்காக, தப்பும் தவறுமாக, இலக்கணப் பிழையோடு எழுதுவது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதுபோன்ற தவறுகள் தவிர்க்கப் படவேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.
திருவிளையாடல் திரைப்படத்தில் நக்கீரர் சொல்வதுபோல சொல்லில் பிழையிருப்பின் மன்னிக்கப் படலாம், பொருளில்தான் பிழை இருக்கக் கூடாது என்ற வசனம் ஒன்று வருமே அது கவனிக்கத் தக்கதே!
சுத்தமான மொழி என்று தாங்களே ஓன்றை நினைத்துக் கொண்டு அதனை பேசிக் கொண்டு மொழிப்பற்று அதிகம் என்கிறார்கள். மொழியைச் சுத்தம் செய்வோம் என்கிறார்கள். எப்படி என்றால் பழைய காலத்தில் இருந்த வழக்குகளை கொண்டுவரவேண்டும் என்கிறார்கள்.
எந்தக் காலம்? தெரியவில்லை. கடைச் சங்கமா, இடைச் சங்கமா, முதற் சங்கமா அல்லது அதற்கு முன்பா? மொழியானது வளர்ந்து கொண்டே இருப்பது. மாற்றங்களை ஏற்காவிட்டால் புறந்தள்ளப்படுவது இயற்கை.
எழுதுவதில் ஒரு சொல்கூட புரியாமல் போகக் கூடாது. எளிய சொல், எளிய சந்தம், அந்த எழுத்து பொது மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்கிறார் மகாகவி பாரதி.
"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஒரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன். காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்தல் வேண்டும்." --- மகாகவி பாரதி.
பாரதியின் அடியொற்றி வந்த நம் பாவேந்தர் பாரதிதாசன் கீழ் வருமாறு சொல்கிறார்.
எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்;
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்;
வெளியுலகில், சிந்தனையில் புதிதுபுதி தாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதும்வேண்டும்;
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்! --- பாவேந்தர் பாரதிதாசன்
நம்மவர்களோ, இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில திருத்தங்கள் செய்து திருப்தி கொள்கிறார்கள். விஷயத்தை விடயம் ஆக்கிவிட்டாலே திருப்தி வந்துவிடுகிறது அவர்களுக்கு! அது மக்களுக்கு புரியும் விதத்தில் உள்ளதா என்பதில் கவலை இல்லை. “பார்த்தீர்களா நாங்கள் எப்படி மொழித் தூய்மை பேணுகிறோம்” என்று மார் தட்டுகிறார்கள்.
உடன்பாடில்லை என்றால், உடனே கேட்கிறார்கள், நீ யார்? நீ எங்கிருந்து வந்தாய் என்கிறார்கள்!
இதனால்தான் எனக்குச் சுத்தம் என்றாலே அலர்ஜி. உயிர்கள் உருவாவதே அசுத்தத்தில் இருந்துதான்!
அவர்கள் செய்வது மக்களைப் பிரிப்பதுதான்! அதற்கும் மேல் இனத்தை சுத்தம் செய்வோம் என்கிறார்கள். எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்! படிப்பதோ இராமாயணம் இடிப்பதோ பெருமாள் கோயில்!
இது ஏதோ எங்கோ நடந்து கொண்டிருக்கிறது என்று எண்ண வேண்டாம். ஒவ்வொரு விட்டிலுமே இது பல வடிவிலே வடிவாகச் செயல்படுத்தப்படுகிறது.
“ இவனை/இவளை கைக்கு அடக்கமாக இருக்கும்போதே வழிக்கு கொண்டு வருவோம். இல்லையென்றால் ஒழிச்சுடுவோம்” என்ற எண்ணம்தான்!
நம் பேராசான் சொல்வது இதுவன்று. கருவிலேயே சிதைக்கப்படும் திருக்கள் ஏராளம்!
அடிமைத்தனத்திற்கும், அடக்குமுறைக்கும், அராஜகத்திற்கும் அதுவே அடிப்படையுமாம்.
மேலுக்குச் சுத்தத்தையும் விடுதலையையும் சத்தமாகப் பேசுவோம்! ஏன் என்றால்? சும்மா பேசுவோம், பேசிக் கொண்டே இருப்போம்!
“எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்; இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.”
மாறுவோம், மாற்றுவோம் என்கிறார் நம் பேராசான்.
மீண்டும் ஒருமுறை நேற்றுப் பார்த்த அந்தக் குறளைப் படிப்போம். பொருள் புரியலாம்!
“இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.” --- குறள் 879; அதிகாரம் – பகைத்திறம் தெரிதல்
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
