இளையர் இன்னமுறையர் ... குறள் 698
20/10/2021 (239)
காட்சி - 1
வானொலியில் பாடல்
“பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே..
கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது …”
காட்சி – 2
இடம் – டீ கடை
ஏட்டு அய்யா (head constable): என்னா குமாரு, இங்கே அங்கே சுத்திட்டே இருக்க?
குமார்: வணக்கம் அய்யா. கடைக்கு போய்ட்டு வர சொன்னாங்க. அதான் ஒரு டீ சாப்பிட்டு போலாம்ன்னு வந்தேன்.
ஏட்டு: நீ படிப்பை முடிச்சு ரொம்ப நாளாயிடுச்சு போல. ஒரு வேலைக்கு போகாமா ஊரை சுத்திட்டு இருக்கே.
குமார்: முயற்சி பண்ணிட்டு இருக்கேன் சார்.
ஏட்டு: ம்ம். சரி, சரி கிளம்பு. ஊரை சுத்திட்டு இருந்த தொலைச்சுடுவேன்.
மறுநாள். இடம் – காவல் நிலையம்
ஏட்டு: காவல் நிலையத்தில் உட்கார்ந்து இருக்கிறார்.
அப்போது, நம்ம குமார் உள்ளே நுழைகிறார்.
ஏட்டு: (நம்ம குமாருக்கு) சட்டென்று விரைப்பாக எழுந்து நின்று ‘வணக்கம் ஐயா’
குமார்: (தலை ஆட்டிட்டு) வேகமாக உள்ளே போகிறார்.
என்ன ஆச்சு, ஒரு நாளிலே? ஏன் ஏட்டு அப்படி மாறிப்போனார்? ஒன்றுமில்லை. நம்ம குமார், இப்போ IPS குமார் ஆயிட்டார். அவ்வளவுதான்.
இது நிற்க. நாம குறளுக்கு வருவோம்.
மன்னரைச் சேர்ந்து ஒழுகலில் எட்டாவது குறள். அந்த காலத்தில் யானை மாலை போடும். இந்த காலத்தில் மக்கள் ஆதரவில் மந்திரிகள் ஆகிறார்கள்.
ஒரு தலைமை உருவாகிவிட்டால், அந்த தலைவர் எனக்கு வயதிலே சின்னவன், அவனை சின்ன வயசிலிருந்தே பார்த்திருக்கேன் அப்படி, இப்படின்னு இகழ்ந்து பேசக் கூடாதாம். அந்த தலைமை இடத்திற்குன்னு ஒரு தகுதி, மரியாதை இருக்கும். அதை கவனித்து நடக்கனுமாம். அப்படி நடக்கலைன்னா வேலைக்கு ஆகாது. நான் சொல்லைங்க. நம்ம வள்ளுவப் பெருமான் சொல்கிறார்.
“இளையர் இன்னமுறையர் என்றுஇகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.”--- குறள் 698; அதிகாரம் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
இளையர் இன்னமுறையர் என்றுஇகழார் = இவர் எனக்கு இளையவர், எனக்கு இந்த உறவு (எனக்குத் தெரியாதா) என்று (தலைமையை சேர்ந்து இருப்பவர்கள்) இகழ மாட்டார்கள்; நின்ற ஒளியோடு ஒழுகப் படும் = அந்த தலைமைக்கு என்று இருக்கும் புகழோடு மரியாதையாக நடந்து கொள்வார்கள்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
