14/08/2022 (533)
மானம் எனும் அதிகாரத்தின் நிறைவுக் குறளாகச் சொல்லப் போகிறார் நம் பேராசான்.
தம் குடிக்கு ஒரு இழுக்கு வருமேயானால் அதைத் தடுக்கும் பொருட்டு தன் உயிர் ஈந்து குடியின் மானத்தைக் காப்பவர்களின் புகழை இந்த உலகம் என்றென்றும் போற்றும், பாராட்டும் மற்றும் அந்தப் புகழ் நிலைக்கும்.
நாம் சாப்பிடும் உப்பிற்கு வரி விதிக்கப்பட்டது. அது சட்டமாகியது 1882ல்! உப்பு எடுப்பது அரசின் உரிமை என்று 1930ல் அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து கிளம்பியதுதான், அண்ணல் காந்தி அடிகளால் நிகழ்த்தப்பட்ட சட்ட மறுப்பு இயக்கம்.
இந்தப் போராட்டம் நாடெங்கும் பரவியது. தமிழகத்தின் கிராமங்களிலும் எதிரொலித்தது. சனவரி திங்கள் (January) 10 ஆம் நாள், 1932 ஒரு அமைதி ஊர்வலம் தமிழகத்தின் ஒரு சிறிய ஊரில் நடந்தது. சிறியவர்கள் முதல் தள்ளாதவர்கள் வரை அனைவரும் பங்கேற்றனர். ஆங்கிலேய அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்து. பலர் தாக்கப்பட்டார்கள், படு காயமுற்றார்கள்.
அந்த அமைதி ஊர்வலத்தை தலைமை ஏற்றவன் ஒரு இளைஞன். இருபத்தி ஏழு, இருபத்தி எட்டு வயதிருக்கலாம். ஒடுங்கிய தேகம். ஆனால். ஒடுக்கமுடியா சுதந்திரத் தாகம். கையிலே மூவர்ணக் கொடி. அதை உயர்த்திப் பிடித்தவாறு அந்நிய ஏகாத்தியபத்தியத்திற்கு அறை கூவல்!
பொறுக்க முடியுமா ஆட்சியாளர்களுக்கு? வன்மையாகத் தாக்கப்பட்டான். உடலெங்கும் ரத்தம். உடன் வந்தவர்கள் வன்முறையால் விரட்டி அடிக்கப் படுகிறார்கள்.
அவன் கலங்காது எதிர்த்து நிற்கிறான். அவனைக் குறி வைத்து அதிகாரம் கொடுமையாகத் தாக்குகிறது. நிலை குலைகிறான். மயங்குகிறான். சரிந்து வீழப்போகிறான். அந்த நொடி, கையில் இருக்கும் கொடி நழுவுவது அவனுக்குத் தெரிகிறது.
நம் சுதந்திரக் கொடி தரையில் வீழ்வதா? அதை இறுகத் தன் நெஞ்சோடு அனைத்துக் கொள்கிறான். மேலும் ஒரு பலத்த அடி விழுகிறது. கீழே சாய்ந்துவிட்டான்.
அவனோ மண் மேலே, நம் கொடியோ அவன் மார் மேலே!
அவர்(ன்) தான் கொடிகாத்த நம் திருப்பூர் குமரன்.
மறு தினம், 11/01/1932 ல் இந்த பூமித்தாய் அவனைத் தழுவிக் கொள்கிறாள். வீர மரணம் எய்திவிட்டான்.
வள்ளுவப் பெருந்தகை சொல்லும் இந்தக் குறளுக்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் தேவையா என்ன?
“இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏற்றும் உலகு.” --- குறள் 970; அதிகாரம் – மானம்.
இளிவரின் வாழாத மானம் உடையார் = தன் குடிக்கு ஒரு மானக் கேடு, இழிவு வரும் நேரத்தில் தன் உயிர் ஈந்து மானத்தை காக்கும் தன்மை உடையவர்களை; ஒளி தொழுது ஏற்றும் உலகு = அவர்களின் செயல்களுக்குத் தலை வணங்கி, அவர்களின் புகழைப் போற்றி இந்த உலகம் எப்போதும் ஏற்றும்.
தன் குடிக்கு ஒரு மானக் கேடு, இழிவு வரும் நேரத்தில் தன் உயிர் ஈந்து மானத்தை காக்கும் தன்மை உடையவர்களின் செயல்களுக்கு இந்த உலகம் தலை வணங்கும்; அவர்களின் புகழைப் போற்றி இந்த உலகம் என்றென்றும் ஏற்றும்.
வாழ்க நம் கொடி காத்த குமரன் புகழ்! வளர்க நம் சுதந்திரம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments