இழுக்காமை யார்மாட்டும் ... குறள்கள் 536, 539
28/11/2021 (278)
பொச்சாப்பு இழுக்காமை, அதாவது பொச்சாவாமை யாரிடத்திலும் எல்லாக் காலத்திலும் தவறாமல் இருந்தால் அது போன்று சிறப்பு ஏதும் இல்லை என்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.
“இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுஒப்பது இல்.” --- குறள் – 536; அதிகாரம் – பொச்சாவாமை
யார்மாட்டும் என்றும் இழுக்காமை வழுக்காமை = யாரிடத்திலும், எல்லாக் காலத்திலும் பொச்சாவாமை (கடமையை மறவாத தன்மை) இருக்குமாயின்; அது ஒப்பது இல் = அதற்கு இணை இல்லை.
குறள் 537 (இங்கே காணலாம்) மற்றும் 538 (இங்கே காணலாம்) முன்பே பார்த்துள்ளோம்.
நாம மகிழ்ச்சியிலே மிதந்து இருக்கும்போது நமக்கு என்ன கவனம் வரவேண்டுமென்றால் இந்த மாதிரி மிதப்பில் இருந்து கடமை தவறி தன் சிறப்பை இழந்தவர்களைப் பற்றிய கவனம் வரவேண்டுமாம். அப்படி வந்துவிட்டால் நாம் கடமை தவறுவது தவிர்க்கப்படும் என்கிறார் நம்ம பேராசான்.
“இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.” --- குறள் 539; அதிகாரம் – பொச்சாவாமை
தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து = அவங்க அவங்க மகிழ்ச்சியிலே ஆழ்ந்து இருக்கும் போது; இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக = பொச்சாப்பால் கெட்டவர்களை நினைக்க
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
