03/05/2024 (1154)
அன்பிற்கினியவர்களுக்கு:
எவ்வது உறைவது உலகம்; அவ்வது உறைவது அறிவு என்றார் குறள் 426 இல். காண்க 01/05/2024.
மருந்து அதிகாரத்திலிருந்து ஒரு பாடலைப் பார்க்க வேண்டியுள்ளது.
இயற்கை நமக்குச் சொல்லித் தரும் ஒரு பாடம்: “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு”
இழிவறிந்து உண்பான் கண் இன்பம் போல் நிற்கும்
கழிபேர் இரையான் கண் நோய். – 946; - மருந்து
இழிவு அறிந்து உண்பான் கண் இன்பம் போல் நிற்கும் = மிகுதியாக உண்பதனால் உடல் சீரழியும் என்று அளவறிந்து உண்பவனிடம் எங்கனம் இன்பம் நீடித்து நிற்குமோ அதனைப் போல; கழி பேர் இரையான் கண் நோய் = நன்றாக மூச்சு முட்ட உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்பவனிடம் நோய் என்னும் துன்பம் தொடரும், அழிக்கும்.
மிகுதியாக உண்பதனால் உடல் சீரழியும் என்று அளவறிந்து உண்பவனிடம் எங்கனம் இன்பம் நீடித்து நிற்குமோ அதனைப் போல, நன்றாக மூச்சு முட்ட உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்பவனிடம் நோய் என்னும் துன்பம் தொடரும், அழிக்கும்.
இன்னும் ஓரிரு திங்களில் நம் திருக்குறள் தொடர் நிறைவு பெறும்!
விடுபட்ட குறள்களைப் பார்த்துக் கொண்டுள்ளோம். எனவே, இந்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் தாவ வேண்டியுள்ளது.
அரண் என்னும் அதிகாரத்தில் இருந்து ஒரு குறளைப் பார்க்க வேண்டியுள்ளது.
அந்தக் குறளைப் பார்ப்பதற்கு முன் ஒரு தெனாலிராமன் கதையைப் பார்ப்போம். உங்களுக்கும் தெரிந்த கதைதான். தெரிந்திருந்தாலும், மீண்டும் மிண்டும் கதைகள் கேட்கத் தூண்டுவன அல்லவா?
தெனாலிராமன் கிருஷ்ண தேவராயரின் அவையினில் அமைச்சராக இருந்தபோது, வாதப் போருக்காக வித்யாசாகர் என்னும் புலவர் வந்தார். அவர் எவரையும் தம் வாதத் திறமையினால் எளிதாக வெற்றி காண்பார்.
என்னுடன் போட்டியிட இந்த அவையினில் யாரேனும் இருக்கிறீர்களா என்று சவால்விட்டார். அனைவரும் ஒதுங்கிக் கொள்ள நம் தெனாலி நான் அணியமாக (தயாராக) இருக்கிறேன். நாளை காலை வைத்துக் கொள்ளலாம் என்றார். அனைவர்க்கும் ஒரு பயம் கலந்த ஆச்சர்யம்.
மறுநாள், நம் தெனாலி தம் இரு கைகளால் பட்டுத் துணியால் சுற்றப்பட்ட புத்தகம் போன்ற ஒன்றை எடுத்துவந்து தம் மேசையின் மேல் வைத்து அதனை வணங்கிவிட்டு அமர்ந்து கொண்டார்.
புலவர் வித்யாசாகருக்கோ அந்தப் புத்தகம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அவர் அதுவரை வந்த எல்லா நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர். இருப்பினும், அந்தக் கட்டின் வடிவத்தைப் பார்த்தபோது அது என்ன நூலாக இருக்கும் என்பது பிடிபடவில்லை. தெனாலியிடமே கேட்டுவிட்டார்.
தெனாலியும் அந்தக் கட்டினைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு, “புலவர்க்கு புலவர் பெருமானே, நீங்கள் அறியாதது ஒன்றும் இருக்க முடியாது. ஆனால், நான் அனுதினமும் பார்ப்பதும், கற்பதும், உண்பதும், உறங்குவதும் இதனைக் கொண்டுதான். ஆகையினால் இதனைக் கொண்டு உங்களிடம் வாதம் புரிய வந்துள்ளேன். இதன் பெயர் உங்களுக்கும் தெரிந்திருக்கும். இதனைத் “திலகாஷ்ட மகிஷ பந்தனம்” என்பார்கள்.” என்றார்.
அது போன்றதொரு நூலை வித்யாசாகர் கேள்விப்பட்டதே இல்லை. பாவம். என்ன செய்வார்?
தெனாலியே, இன்று என் மன நிலை சரியாக இல்லை. நாளை நம் வாதத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன். நாளை வைத்துக் கொள்ளலாமா? என்றார்.
தெனாலியும் “உங்கள் விருப்பப்படியே ஆகட்டும் புலவர் பெருமானே!” என்று அவரை வணங்கி வழியனுப்பி வைத்தார்.
வித்யாசாகர் வீட்டிற்குச் சென்று அனைவரிடமும் விசாரித்துப் பார்த்தார். அது போன்றதொரு நூலை யாருமே வாசித்து இருக்கவில்லை. போட்டியில் தோற்றுப் போக விரும்பாத வித்யாசாகர் அந்த ஊரைவிட்டு இரவோடு இரவாக நடையைக் கட்டினார்.
பொழுது விடிந்தது. நம் தெனாலியும் அந்தக் கட்டுடன் அவைக்கு வந்து தம் இருக்கையில் அமர்ந்து கொள்ள, புலவர் வித்யாசாகர் அந்த ஊரைவிட்டுச் சென்றுவிட்டது தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ண தேவராயருக்கோ ஒரே ஆச்சர்யம். தெனாலியே நீவீர் வைத்து இருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்தன நூலில் என்ன உள்ளது? அதனை எங்கள் அனைவருக்கும் தெளிவாக்கவும் என்றார்.
தெனாலி அந்தக் கட்டினைப் பிரிக்க அதற்குள் காய்ந்து போன எள் கதிர்களை எறுமையைக் கட்டும் கயிற்றினால் கட்டி வைத்திருந்தது.
அரசே, திலகம் என்றால் எள்; காஷ்டம் என்றால் காய்ந்த செடி; மகிஷ பந்தனம் என்றால் எருமையைக் கட்டும் கயிறு அவ்வளவே! இதன் தொகுப்புதான் “திலகாஷ்ட மகிஷ பந்தனம்” என்றார்.
கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் விளக்கேறியவள் (1965) என்ற திரைப்படத்தில் “கத்தியைத் தீட்டாதே உந்தன் புத்தியைத் தீட்டு” என்று ஒரு பாடலை அமைத்திருப்பார்.
அரண் என்பது அவ்வாறாக அமைந்திருக்க வேண்டும். அப்பாடா, ஒரு வழியாக அரணுக்குள் வந்துவிட்டேன்!
“பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்லே” என்ற வகையினில் அரண் இருக்க வேண்டுமாம்.
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண். – 749; - அரண்
முனை முகத்து மாற்றலர் சாய = போருக்கு முனைய நினைக்கும் அந்த நொடியிலேயே, மாற்றார் தங்கள் உறுதியை இழக்கச் செய்யும் வகையினில்; அரண் வினை முகத்து வீறு எய்தி மாண்டது = அரணானது தனது செயல் திறமையினால் சிறப்புப் பெற்றும், மேலும், எதிரிகளைச் சிதறடிக்கும் பல வகைப் பண்புகளை ஒருங்கே பெற்றும் உயர்ந்து நிற்க வேண்டும்.
போருக்கு முனைய நினைக்கும் அந்த நொடியிலேயே, மாற்றார் தங்கள் உறுதியை இழக்கச் செய்யும் வகையினில், அரணானது தனது செயல் திறமையினால் சிறப்புப் பெற்றும், மேலும், எதிரிகளைச் சிதறடிக்கும் பல வகைப் பண்புகளை ஒருங்கே பெற்றும் உயர்ந்து நிற்க வேண்டும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments