top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

ஈன்றாள் பசிகாண்பான் ... 656

25/04/2023 (782)

தவிர்க்க வேண்டியச் செயல்களைக் குறித்து ஐந்து பாடல்கள் மூலம் (652 – 657) சொல்லிக் கொண்டு வருகிறார். அதாவது, சுருக்கமாக, பழியும், பாவமும் தரும் வினைகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

நான்கு பாடல்கள் மூலம்:

1) புகழொடு நல்ல பயன்களைத் தராதச் செயல்களைத் தவிர்த்தல் – குறள் 652. காண்க 20/04/2023 (777).

2) பெருமையைக் குலைக்கும் செயல்களைத் தவிர்த்தல் – குறள் 653. காண்க 22/04/2023 (779).

3) துன்பத்திலே உழன்று கொண்டிருந்தாலும் தாழ்வான, அறமற்றச் செயல்களைத் தவிர்த்தல் – குறள் 654. காண்க 23/04/2023 (780).

4) வருத்தத்தில் ஆழ்த்தும் செயல்களைத் தவிர்த்தல் – குறள் 655; காண்க 24/04/2023 (781).

இந்த நான்கு பாடல்களைச் சொன்ன நம் பேராசானுக்கு, ஒரு உதாரணம் சொன்னால் என்னவென்று தோன்றிவிட்டது. அதற்கு மேலும் சொல்லத் தேவையில்லை என்ற எண்ணத்தில் முத்தாய்ப்பாக ஒரு குறளைச் சொல்கிறார்.

தம்பி, உன் அம்மா பசியோடு இருக்கிறாள் என்றாலும் பெரியோர்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாதே என்கிறார். அதாவது, நீ செய்யும் அநியாயங்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தைக் கற்பிக்காதே என்கிறார். இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா என்று கேட்கிறார். வினையில் தூய்மை தம்பி, இதுதான் முக்கியம் என்கிறார்.

இந்தக் குறளை நாம் ஏற்கெனவே சிந்தித்துள்ளோம். காண்க 04/08/2022 (523). மீள்பார்வைக்காக:


ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.” --- குறள் 656; அதிகாரம் – வினைத்தூய்மை


தலை சிறந்த அற நூல்களில், அன்னை, தந்தை, குரு, பணியாளர்கள் போன்றோரின் பசியைப் போக்க வேண்டியிருந்தாலும், தேவர்களையும், விருந்தினர்களையும் போற்றுதல் பொருட்டும் யாரிடமும் தானம் வாங்கலாம் என்று இருக்கிறதாம். ஆனால், அந்தத் தானத்தால் தான் செழிக்கக் கூடாது என்றும் இருக்கிறதாம்.


இந்தக் கருத்திலிருந்து மாறுபடுகிறார் நம் பேராசான். தேனை வழித்தால் புறங்கையை நக்குவதைத் தவிர்க்க இயலாது. அந்தத் தேன் கலயம் உன்னுடையதல்ல எனும் போது அதிலிருந்து வழிவதைப் பற்றி உனக்கென்ன அக்கறை? அதனை நீ ஏன் தம்பி வழிக்க வேண்டும்? வழித்ததனால் அதனை ஏன் நீ சுவைக்க வேண்டும்? என்கிறார்.


செய்யும் செயல்களில் தூய்மையிலும் தூய்மையை வலியுறுத்துகிறார்.

கடினம்தான் முயன்று பார்ப்போம்.


“...ஓடும் உருளும் ஓடும் உருளும் உலகம் தன்னில் தேடும் பொருளும் தேவைதான் தேடும் பொருளும் தேவைதான் அதில் மயக்கமில்லாமல் அடக்கமிருந்தால் அதுவே உயர்ந்த வாழ்க்கைதான் “ --- ‘யார் ஜம்புலிங்கம்’ (1972), கவிஞர் வாலியின் வரிகளில், தமிழிசைச் சித்தர் C S ஜெயராமன் அவர்கள் குரலில்.

இந்தத் திரை இசைப் பாடலையும் முன்பு ஒரு முறை சிந்தித் துள்ளோம். காண்க 07/04/2021 (80).


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






Comments


bottom of page