top of page
Search

ஈன்றாள் முகத்தேயும் ... குறள் 923

21/06/2022 (480)

ஒருவன் என்ன செய்தாலும் அவனின் அம்மா மகனை விட்டுக் குடுக்கமாட்டாள். ஆனால், அவளும் வெறுப்பது எது என்று கேட்டால், அதுதான் போதைக்கு அடிமையாவது.


அவளே வெறுக்கும்போது, சான்றோர்கள் முன்பு போதையில் ஆட்டம் போட்டால் அவர்கள் மட்டும் எப்படி சகித்துக் கொள்வார்கள் என்று சென்ற குறளின் தொடர்ச்சியாகத் தொடர்கிறார் நம் பேராசான்.


ஈன்றாள் முகத்தேயும் இன்னாதல் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி.” --- குறள் 923; அதிகாரம் - கள்ளுண்ணாமை


களி = கள் உண்பது; ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது = பெற்றதாயும் முகம் சுளிப்பாள், வருந்துவாள். கள்ளுண்டு மகன் போதையில் இருந்தால்;

மற்றுச் சான்றோர் முகத்து என்? = அம்மாவே வெறுக்கும்போது, குற்றத்தைக் கண்டு கலங்கும் சான்றோர்கள் முன் போதையில் ஆட்டம் போட்டால் எப்படி சகித்துக் கொள்வார்கள்.


அதாவது, அன்னையும் வெறுப்பாள்; பெரியவர்களும் வெறுப்பார்கள். இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்றால், உன்னை உயர்த்தும் எண்ணம் கொண்ட சான்றோர்களும் கைவிட்டு விடுவார்கள் என்கிறார்.


உன் உடலுக்கு அன்னை காரணம் என்றால், உயர்வுக்கு நல்ல பல சான்றோர்களின் தொடர்பு அவசியம்.


கள்ளுக்கு அடிமையானால் எல்லோரையும் இழப்பாய் என்கிறார்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




 
 
 

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page