11/02/2022 (351)
உங்களுக்கு ஒரு நல்ல image, அதாங்க தோற்றம் வேண்டுமா?
அதற்கு ஒரு வழி சொல்கிறார் நம் பேராசான். ஏற்கனவே, ஈகை என்ற அதிகாரத்தில் சொன்னதைப் பார்த்திருக்கிறோம்.
“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்துஇழக்கும் வன்க ணவர்.” --- குறள் 228; அதிகாரம் - ஈகை
ஈத்துவக்கும் இன்பம் வேண்டுமா? அப்படியென்றால், நாம் ஈவதற்கும் ஒருவர் வேண்டுமல்லவா?
அப்போதுதானே நம்ம Image உயரும்? (இப்படித் தட்டிக் கொடுக்கிறார், நாம கொடுத்துப் பழகுவதற்காக)
இதற்காக இரப்பவர்கள் வேண்டுமா என்று ஆராய்ச்சி கூடாது. “இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு தெள்ளியர் ஆதல் வேறு” (குறள் 374) என்று சொல்லியிருப்பதை கவனிப்போம்.
சரி, நாம குறளுக்கு வருவோம்.
“ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.” --- குறள் 1059; அதிகாரம் – இரவு
மேவார் = மேவுவார் = விரும்புவார்; இரந்துகோள் மேவார் இலாஅக் கடை = அவர்களிடம் சென்று இரந்து பெறுவதை விரும்புபவர்கள் இல்லையென்றால்; ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் = கொடுப்பவர்களுக்கு என்ன புகழ் உண்டாகும்? (புகழ் கிடைக்காது)
1058, 1059 குறள்கள் மூலம் இரப்பவர்களின் தேவையையும் சுட்டுகிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comentarios