உடைசெல்வம் ஊண்ஒளி கல்வி ... 939, 398
10/07/2022 (499)
அகடாரார் அல்லல் உழப்பர் … குறள் 936
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் … குறள் 937
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள் கெடுத்து … குறள் 938
சூதினால் என்ன, என்ன நடக்கும் என்று சொல்லிக் கொண்டு வருகிறார் நம் பேராசான்.
மேற்கண்ட குறள்கள் குறிப்பால் உணர்த்துபவை.
சரி தம்பி, நேரடியாகவே சொல்கிறேன். உனக்கு சுலபமாக புரியும்படி சொல்கிறேன். இது உனக்கு நிச்சயம் புரியும். அதாவது, ஒரு ஐந்து விஷயங்கள் இல்லாமல் போகும் சூதாடினால்!
அதாவது, நல்ல உடை, கையிலே காசு, பசிக்கு உணவு, சமுகத்தில் மரியாதை, அறிவைக் கொடுத்தக் கல்வி –உன்னிடம் இருந்த இந்த ஐந்தும் உன்னைப் பிடிக்காமல் ஓடிவிடும்.
நம்மாளு: அது எப்படி சார், கற்ற கல்வி ஓடும்? நாம ஏறகனவே ஒரு குறளை 09/11/2021 (259) அன்று பார்த்து இருக்கோமே?
ஆசிரியர்: அருமை. என்ன குறள் தம்பி?
நம்மாளு:
“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.” --- குறள் 398; அதிகாரம் - கல்வி
ஒருவற்கு = ஒருவனுக்கு; தான் ஒருமைக்கண் கற்ற கல்வி = தான் ஒரு பிறப்பில் கற்ற கல்வி, பெற்ற அறிவு; எழுமையும் ஏமாப்பு உடைத்து = ஏழு பிறப்புக்கும் சென்று உதவும்.
ஆசிரியர்: அழகு. ஆனால், ஒரு பழமொழி இருக்கு தம்பி. கல்வியால் பெற்ற அறிவைப் பயன்படுத்தனும். “நூறுநாள் ஓதி ஆறு நாள் விடத்தீரும்” ன்னு ஒரு பழமொழி இருக்கு. அதாவது, நூறு நாள் படித்தாலும், ஆறு நாள் அதை திருப்பிப் பார்க்கவில்லையென்றால் அது மறந்துவிடும். சூதுக்குள் போனால் வேறு எதிலும் கவனம் போக வாய்ப்பில்லை. அதனால் கற்ற கல்வி மறக்கும். அது மட்டுமல்ல, கற்ற கல்வியினால், சூது தவறு என்று தெரிந்திருந்தும், அதன் பின் போனால் கல்வி இருந்தும் என்ன பயன்?
“உடைசெல்வம் ஊண்ஒளி கல்வியென்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்.” --- குறள் 939; அதிகாரம் – சூது
ஊண் = உணவு; ஒளி = புகழ், பெருமை; ஆயம் = தாயம், சூதாடும் கருவி
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
