20/06/2022 (479)
கள்ளின் மேல் காதல் கொண்டு போதையிலேயே இருப்பவர்களை யாரும் கண்டுக்க மாட்டாங்க. அவங்க சிறப்பும் போயிடும் என்று முதல் குறளிலே சொன்னார் நம்பேராசான்.
அதற்கு நம்மாளு ஒரு எதிர் கேள்வி வைக்கிறார்.
நம்மாளு: கண்டவன் மதிக்கனும்ன்னு நான் குடிக்கக் கூடாதா? எனக்கு அதைப் பற்றி கவலையில்லை!
ஆசிரியர்: தம்பி, சமுதாயத்தில் உனக்கு ஒரு இடம் வேண்டும் என்றால் நீ எப்போதும் போதையிலேயே இருக்கக் கூடாது. அது மட்டுமில்லை, தம்பி, சமுதாயத்தில் உனக்கு வழிகாட்ட, உனக்குத் துணையாக பெரியவர்கள் இருப்பாங்க. அந்த மாதிரி சான்றோர்களும் உன்னைப் பற்றி கண்டுக்க மாட்டாங்க.
நாம் ஏற்கனவே, ‘பெரியாரைப்பிழையாமை’ என்ற அதிகாரத்திலிருந்து ஒரு குறளைப் பார்த்திருக்கிறோம். மீள்பார்வைக்காக காண்க 20/05/2022 (448).
“கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்றுபவர்கண் இழுக்கு.” --- குறள் 893; அதிகாரம் – பெரியாரைப்பிழையாமை
அடல் = வெற்றி, அழித்தல்;
அடல் வேண்டின் ஆற்றுபவர்கண், கெடல்வேண்டின் கேளாது இழுக்கு செய்க! என்பது பொருள்.
நீ கெட்டுப்போகனும்ன்னு நினைத்தால் உன் இஷ்டம்தான். நீ குடிக்கனுமா குடிச்சுக்கோ. ஆனால், உன்னைச் சான்றோர்கள் கைவிட்டு விடுவார்கள்.
“உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரால்
எண்ணப் படவேண்டா தார்.” --- குறள் 922; அதிகாரம் – கள்ளுண்ணாமை
கள்ளை உண்ணற்க = அறிவு இருப்பவர்கள், அறிவை அழிக்கும் கள்ளை உண்ணாது ஒழிக;
உணில் உண்க சான்றோரால் எண்ணப்பட வேண்டாதார் = அப்படியில்லை, சான்றோர்களாகிய நல்லவர்களின் தொடர்பு தேவையில்லை என்றால் குடித்துக் கொள்.
முதல் குறளில் பொதுப்படக் கூறிய நம் பேராசான், சிறப்புபட சான்றோராலும் கைவிடப் படுவர் என்கிறார். சான்றோர்கள் எப்போதும் சற்று பொறுமையைக் கடை பிடிப்பவர்கள். அவர்களும் பொறுமையிழப்பர், ‘நீ குடிக்கிறாய்’ என்று தெரிந்தால் என்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments