top of page
Search

உண்ணாமை வேண்டும் புலாஅல் ...

Writer's picture: Mathivanan DakshinamoorthiMathivanan Dakshinamoorthi

18/12/2023 (1017)

அன்பிற்கினியவர்களுக்கு:

புண் என்றால் காயம், வடு, ஊறு, தசை என்று பல பொருள்களைச் சுட்டுகிறது தமிழ் அகராதி.

 

“நமக்கு வந்தால் இரத்தம்; பிறர்க்கு வந்தால் அது தக்காளி சட்னி” - இது தற்கால சொலவடை.

 

அதுபோல நமக்கு உடம்பில் இருப்பதும் தசைதான். அஃதாவது புண்தான். அதை அறுத்தாலும் இரத்தமும், பெரு வலியும் நிச்சயம். அதுபோல பிற உயிர்களின் புண்ணை (தசையை) அறுத்தாலும் அஃதே. இதை உணர்ந்தவர் பிறிதோர் உயிரை அறுத்து உண்பரோ என்கிறார்.

 

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்ண துணர்வார்ப் பெறின். – 257; - புலால் மறுத்தல்

 

புலா(அ)ல் பிறிது ஒன்றன் புண் = இறைச்சியானது பிறிது ஓர் உயிரின் தசை. அதுவும் இறந்த உயிரின் தசை. (இழிவு நோக்கிப் புண் என்றார்); அஃது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் = அதனை உணர்ந்தவர்கள் அந்தப் புண்ணை உண்ணாமல் இருக்க வேண்டும்.

 

இறைச்சியானது பிறிதோர் உயிரின் தசை. அதுவும் இறந்த உயிரின் தசை. (இழிவு நோக்கிப் புண் என்றார்). அதனை உணர்ந்தவர்கள் அந்தப் புண்ணை உண்ணாமல் இருக்க வேண்டும்.

 

வடலூர் வள்ளல் பெருமான், வடலூரில் உள்ள ஞான சபையின் நுழை வாயிலில், “புலை கொலை தவிர்த்தோர் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும்” என்று எழுதி வைத்துள்ளார். அஃதாவது, புலாலைத் தவிர்த்தவர்கள், உயிரைக் கொல்லாதவர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே நுழைதல் கூடா.

 

மேலும் வள்ளல் பிரான் பஞ்ச மகா பாவங்கள் என்று ஐந்து பாவங்களைக் குறிக்கிறார்:

 

“கள், காமம், கொலை, களவு, பொய் இவ்வைந்தும் கொடிய துக்கத்தை உண்டுபண்ணும். இவ்வைந்திலும் கொலை விஷேஷ  பாவம். எனினும், கள்ளுண்டவனுக்குக் காமம் உண்டாகாமலிருக்காது, கொலை  செய்யத்துணிவு வராமலிருக்காது, களவு செய்யாமலிரான், பொய் பேச அஞ்சான். ஆகையால், இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம். இதில் ஒன்றை அடைந்தனானாலும் அவனை மற்றவை தொடராம லிரா.”

 

எல்லா அருளாளர்களும் சொல்வன இவற்றைத்தாம். நம் பேராசான் அவற்றை எப்போது எப்படி எவ்வாறு செய்ய வேண்டும் என்று நெறிபடுத்திச் சொல்லியதுதான் சிறப்பு. இது போன்று, அமைக்கப்பெற்ற அறநூல் வேறு ஒன்று இருக்குமா என்பது ஐயமே! காலம் கடந்தும் நிலைத்து நிற்பதும் இதன் சிறப்பு.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




2 Comments


velakode
Dec 18, 2023

In Thiagarajar college of Engg. Madurai campus till date No NV mess. In 1962 when students went on strike demanding NV mess the founder made it very clear that it would remain as veg only campus for ever. That was his commitment to thirukkural. Great personality.

Like
Replying to

Interesting to know, needs a lot of conviction to follow this even today.

Like

©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page