top of page
Search

உதவி வரைத்தன் றுதவி ... 105, 102

13/09/2023 (921)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

ஒருவர்க்குச் செய்யும் உதவி அந்த உதவியின் அளவைப் பொறுத்து மதிப்பிடப்படுமா? அல்லது, அதைப் பெற்றவர்க்கு அது தரும் பயனைப் பொறுத்து மதிப்பிடப்படுமா?


சிறிய உதவியே ஆனாலும் அதனைப் பெற்றவர்க்கு அது பெரும் பயனை அளித்தால் அதுதான் சிறப்பு. காலம், இடம், பொருள் ஆகியன அறிந்து உதவும் போது அது பேருதவியாய் மாறும்.


ஒரு சொல், ஒரு சிறிய செய்கை, சின்னதொரு அரவணைப்பு, மெலிதான ஒரு புன்னகை, சிறிய தொகை, பசித்திருப்பவனுக்கு ஒரு கைப்பிடி உணவு ... இப்படிப் பல தங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளதாக பலர் சொல்கிறார்கள்.


உதவி வரைத்தன் றுதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.” --- குறள் 105; அதிகாரம் – செய்ந்நன்றியறிதல்


சால்பு = உயர்வு; உதவி உதவி வரைத்து அன்று = உதவியானது அந்த உதவியின் அளவைப் பொறுத்தது அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து = (அது) உதவியைப் பெற்றவர்கள் பெறும் உயர்வைப் பொறுத்தது.


உதவியானது அந்த உதவியின் அளவைப் பொறுத்தது அன்று. அது உதவியைப் பெற்றவர்கள் பெறும் உயர்வைப் பொறுத்தது.


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.” --- குறள் 102; அதிகாரம் – செய்ந்நன்றியறிதல்


காலத்தினால் செய்த நன்றி = தக்கத் தருணத்தில் கை கொடுத்து தூக்கி விடுவது என்பது; சிறிது எனினும் = சின்னதொரு உதவிதான் என்றாலும்;

ஞாலத்தின் மாணப் பெரிது = (அவ்வுதவி) இந்த உலக்கத்தில் ஆயிரம் உதவிகள் “இங்கே பார், என்னைப் பயன்படுத்திக் கொள்” என்று கொட்டிக் கிடந்தாலும் அவற்றையெல்லாம்விட மிகப் பேருதவியாக அமையும்.


தக்கத் தருணத்தில் கை கொடுத்து தூக்கி விடுவது என்பது சின்னதொருஉதவிதான் என்றாலும் அவ்வுதவியானது இந்த உலக்கத்தில் ஆயிரம் உதவிகள் “இங்கே பார், என்னைப் பயன்படுத்திக் கொள்” என்று கொட்டிக் கிடந்தாலும் அவற்றையெல்லாம்விட மிகப் பேருதவியாக அமையும்.


உதவி மலையளவு, கடலளவு, உலகளவு என்பதெல்லாம் அந்த உதவியின் அளவைப் பொறுத்தல்ல. அது தரும் பயனைப் பொருத்தே! நம்மிடம் இருப்பது மிகத்துளியாக இருக்கிறதே அது எப்படிப் பயன் பயக்கும் என்றெல்லாம் எண்ண வேண்டா. நாம் செய்வது நலமாக முடியும் என்ற எண்ணம், நாம் செய்வது சரியானதுதான் என்ற உறுதி இயல்பாக அமைந்திடல் வேண்டும். உதவி செய்யும்போதே அதன் பயனை நம்மால் எப்போதும் கணித்திட இயலாது.


சரி, அப்படியென்றால் எப்படித்தான் நாம் செய்யும் உதவியை ஒழுங்கு படுத்துவது என்ற வினா எழலாம். அஃதாவது உதவியை நீ செய்து கொண்டேயிரு. அதன் பயனை காலம் பார்த்துக் கொள்ளும் என்கிறார். விளையாடினால் தானே வெற்றி கிடைக்கும். நம் ஔவைப் பெருந்தகைச் சொன்னதொரு பாடல், நாம் ஏற்கெனவே பார்த்தப் பாடல்தான் அது. காண்க 27/05/2023 (814). மீள்பார்வைக்காக:


“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்.” --- ஒளவையார் தனிப்பாடல்கள்


அஃதாவது, நட்பு, தயை, கொடை இம்மூன்றினையும் உனது பிறவியின் இயல்பாக ஆக்கிக் கொள் என்கிறார். இவற்றுடன்தான் இவர் பிறந்தாரோ என்று எண்ணும் அளவிற்கு இருக்கட்டும் என்கிறார்.


உதவிக்கு மூன்று குறிப்புகள்:


உதவி செய்வதற்கு முதல் குறிப்பு: எப்போதும் செய். பயனைக் கணக்கிடாதே.

இரண்டாம் குறிப்பு: காலம், இடம், பொருள் ஆகியவை உன்னை உதவி செய்ய உந்துகிறதா உடனே செய்துவிடு.

மூன்றாம் குறிப்பு: செய்த உதவியை மறந்துவிடு! மனம் அமைதி பெறும். உதவி செய்வது என்பது உன் இயல்பான நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கட்டும்.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page