19/01/2024 (1049)
அன்பிற்கினியவர்களுக்கு:
இந்த உடல் அழியக் கூடியதுதான். அது இயற்கையாக, அமைதியாக நடைபெற வேண்டும். இந்த உடலைக் கொண்டு மற்ற உயிர்களை நீக்குபவர்களுக்கும், துன்பம் விளைவிப்பவர்களுக்கும் இறுதிக் காலம் என்ற ஒன்று இருக்கும் என்று தெரியாதா?
அவர்களின் இறுதிக்காலம் உறுதியாக அமைதியாக அமையாது என்கிறார். அந்த இறுதிக் காலமும் நீண்டு கொண்டே போனால்? கொடுமைதான்.
“செயிர்” என்றால் ஊனம், துன்பம், குற்றம், நோய், அழிவு என்றெல்லாம் பொருள்படும்.
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். – 330; - கொல்லாமை
உயிர் உடம்பின் நீக்கியார் = பிற உயிர்களுக்குத் தங்களின் கொடுஞ்செயல்களால் துன்பம் விளைவித்தவர்களுக்கும் பிற உயிர்களை உடலில் இருந்து நீக்கியவர்களுக்கும்; செயிர் உடம்பின் செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கையவர் என்ப = இறுதியில் அழியப் போகும் அவர்களின் உடலின் வாழ்வும் நீண்டு மனத்தில் அமைதியில்லாமல் அவ்வாழ்வு இழிவாழ்வாகும் என்பர்.
பிற உயிர்களுக்குத் தங்களின் கொடுஞ்செயல்களால் துன்பம் விளைவித்தவர்களுக்கும், பிற உயிர்களை உடலில் இருந்து நீக்கியவர்களுக்கும் இறுதியில் அழியப் போகும் அவர்களின் உடலின் வாழ்வும் நீண்டு, மனத்தில் அமைதியில்லாமல் அவ்வாழ்வு இழிவாழ்வாகும் என்பர்.
நம்முடைய குற்றங்களை உலகத்தார் முன் மறைத்துவிடலாம். ஆனால், நம்முடைய மனசாட்சி முன் நாம் எப்போதும் இழிபிறப்பாகத்தான் இருப்போம்.
மேற்கண்ட குறளுக்கு அறிஞர் பெருமக்களின் உரை வருமாறு:
பேராசிரியர் சாலமன் பாப்பையா: நோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.
பரிமேலழகப் பெருமான்: நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை, இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர்.
அஃதாவது, சிலருக்குப் பிற்பகல் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளுக்குக் காரணம் , முற்பகல் அவர்கள் செய்த தீவினைகளே என்கின்றனர். முற்பகல் என்பதனைச் சில அறிஞர்கள் முற்பிறப்பு என்றும் கூட்டுகின்றனர்.
நமக்கு விளையும் துன்பங்கள் மூவகைப்படும் என்பதும் நமக்குத் தெரியும். அவையாவன: நாம் செய்யும் வினைகளால், பிறர் செய்யும் வினைகளால், காரணம் ஏதுமின்றியும் நிகழும். எல்லாவற்றிற்கும் முற்பகலையும், முற்பிறப்பையும் கை காட்ட முடியா.
எது எப்படியோ, நாம் மனமறிந்து செய்யும் தீச்செயல்கள் நம் மனத்தையும் உடலையும் வருத்தாமல் போகா என்பது திண்ணம்.
அதனால்தான், மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றார் நம் பெருமான்.
பிற உயிர்களை ஓம்புவோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments