உரம் ஒருவற்கு ... 600
25/02/2023 (723)
‘ஊக்கமுடைமை’ எனும் அதிகாரத்தின் முடிவுரையானக் குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 16/08/2022 (535), 03/11/2022 (610). மீள்பார்வைக்காக:
“உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார்
மரம் மக்கள் ஆதலே வேறு.” --- குறள் 600; அதிகாரம் – ஊக்கமுடைமை
உரம் = அறிவாற்றல்; உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை = அறிவாற்றலுக்கு அடிப்படை ஊக்க மிகுதியே; அஃது இல்லார் மரம் மக்கள் ஆதலே வேறு = அவ்வாறு இல்லாமல் இருந்தால் அவர்கள் மரம் (மரமும் அல்ல), மக்களும் அல்ல.
இது நிற்க.
உயர வேண்டும் என்றால் ஊக்கமும், ஆக்கமும் காரிய காரண சுழற்சி போல தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு தடவை வென்றுவிட்டோம் என்று கண் அயரக் கூடாது. அந்த வெற்றி மேன்மேலும் தொடர அதிக ஊக்கத்தைத் தர வேண்டும்.
ஊக்கத்திற்கு எதிரி எது? அயர்ந்து இருப்பது (complacency); அது பெருகும்: ஓய்வு எடுத்தால் என்ன தவறு என்று தோன்றும் (lethargy); ‘அப்புறம் பார்க்கலாம்’ என்ற எண்ணம் தோன்றும்: அதுவே சோம்பலாகும் (laziness).
அதனால், நம் பேராசான் ஊக்கம் உடைமைக்கு அடுத்த அதிகாரமாக மடி இன்மை என்ற அதிகாரத்தை (61ஆவது) வைத்துள்ளார்.
நாளை தொடரலாம் என்றார் ஆசிரியர்.
பி.கு.1: சோம்பலைத்தான், அக்காலத்தில் ‘மடி’ என்று அழைத்துள்ளார்கள். மடிந்து போவதால் மடி?
சுருக்கமாக “செய் அல்லது செத்துமடி” என்றார் மகாத்மா காந்தி அவர்கள்.
1942 ஆம் ஆண்டு, ஆகஸ்டு திங்கள் 8ஆம் நாள் – அன்றுதான் “வெள்ளையனே வெளியேறு” (Quit India Movement) என்று முழங்கப்பட்டது. அந்த நிகழ்வில் பேசிய போது அண்ணல் காந்தியடிகள் பயன்படுத்தியச் சொற்றொடர்தான் “செய் அல்லது செத்துமடி”.
பி.கு.2: மேன்மேலுமா மென்மேலுமா எது சரி?
‘மென்மேலும்’ என்பது பிழையான சொல்லாடல் என்கிறார்கள். ‘மேலும் மேலும்’ என்ற அடுக்குத் தொடர் ‘மேன்மேலும்’ என்றுதான் மாறுமாம். ‘மென்மேலும்’ என்பது பிழையான சொல்லாடல் என்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
