03/07/2022 (492)
மருந்துதான் என்றாலும், சில மருந்துகள், நம்மை, அதற்கு அடிமையாக்கிவிடும். அத்தகைய மருந்துகளுக்கு habit forming drugs என்பார்கள். அதைப் பயன் படுத்தினால் மீண்டும் மீண்டும் பயன் படுத்தத் தூண்டும். அதனால், தகாத விளைவுகள் ஏற்படும்.
அதனால்தான், “விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு” என்றார்கள். விருந்தும் அப்படித்தான் தொடர்ந்து வித, விதமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கோளாறுதான்.
தொடர்ந்து ஒரு வீட்டில் விருந்தினனாக இருந்தால் அவனது மானம் கெடும் என்பதும் ஒரு பொருள்.
அளவோடு இருந்தால் சமாளிக்கலாம். அளவு மீறினால் அமிர்தமே நஞ்சாகலாம்.
ஆனால், அந்த அளவுதான் நமக்கு தெரியாமல் போய்விடுகிறது. சரி, சரி. அதை எப்படி சரி செய்வது என்கிறீர்களா?
ஒன்றினைக் குறித்த தெளிவு கிடைத்தால் விலகிவிடலாம். அந்தத் தெளிவை உருவாக்கத்தான் வள்ளுவப் பெருமான் இந்த சூது என்னும் அதிகாரத்தை படைத்துள்ளார்.
சூது சீக்கிரம் பழக்கமாகக் கூடியது. பழக்கமாகி, அதுவே வழக்கமாகி அடிமைபடுத்தக் கூடியது.
மீண்டும், மீண்டும் ஓயாது தருமன் தாயம் உருட்டலானான்; சகுனி ஆங்கே வென்றுவிட்டான் …” என்பது கதை.
இரண்டைப் போடு, நாலைப் போடு என்று தொடர்ந்து சூதாடிக் கொண்டே இருந்தால் நமது செல்வங்கள் அனைத்தும் அந்த சூதாட்டம் வழியே மாற்றாருக்குச் சென்று. அதுவே மீண்டும் நம்மைத் துன்புறுத்தும் என்கிறார் நம் பேராசான்.
“உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்
போஓய்ப் புறமே படும்.” --- குறள் 933; அதிகாரம் - சூது
உருள் ஆயம் = உருளும் தாயம்; ஓவாது கூறின்= ஓயாது விளையாடிக் கொண்டிருந்தால்; பொருள் ஆயம் = உண்டானப் பொருள்; (ஆயத்திற்கு இரு வேறு பொருள்களைக் கொண்டு படைத்துள்ளார்) ; போஓய் = போய் என்பதை அழுத்திச் சொல்கிறார் - அளபெடை
போஓய்ப் புறமே படும் = அந்த சூதின் வழியே போஓய் அப்படியே மாற்றாரிடம் சென்று எல்லோரையும் துன்பப் படுத்தும்.
நல்லவர்கள் அல்லாதவர்களிடம் பொருள் சேர்வதால். அது நமக்கும், நம்மைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் துன்பத்தையே ஏற்படுத்தும் என்பதால் ‘படும்’ என்று முடிக்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments