15/10/2022 (593)
அலர் என்றால் ஊர் பழித்துப் பேசுதல் என்று நமக்குத் தெரியும். அலருக்கு வேறு ஒரு சொல்லும் பயன்படுத்துகிறார் நம் பேராசான். அதுதான் ‘கௌவை’.
கௌவை என்றாலும் பழிச்சொல் என்று பொருளாம். ஒருவேளை இந்தக் கௌவை அலரைவிட அதிகமான பழிச்சொல்லாக இருக்கலாம். ஊர் முழுக்க பரவிய அலராக இருக்கலாம். (ரொம்ப ஓவரா போவது!) ஏன் என்றால் இனி வரும் குறள்களில் கௌவை என்ற சொல்லை பயன்படுத்துகிறார் நம் பேராசான்.
அவன்: ஊர் அறிந்த கௌவை எங்களுக்கு நிகழாதோ?
நம்மாளு: என்ன சொல்றீங்க அண்ணே?
அவன்: அதான் தம்பி, கூட்டம் கூட்டமாக இங்கொன்றும் அங்கொன்றும் எங்களைப் பற்றி கிசு, கிசு மாதிரி பேசுவதால் பயன் இல்லை. ஊர் முழுக்க எங்க பேச்சுதான் இருக்கனும். அது மட்டும் சீக்கிரம் நடந்துன்னா…
நம்மாளு: நடந்துன்னா?
அவன்: எனக்கு கிடைக்காதது கிடைத்த மாதிரிதான்!
நம்மாளு: என்னது கிடைக்காதது?
அவன்: திருப்பி, திருப்பி பேசற நீ. காதை இங்கே கொண்டு வா. “நாங்க இரண்டு பேரும் _________ இன்பம்”. புரிந்ததா?
நம்மாளு: ஒன்னுமே புரியலை.
அவன்: உனக்கா தம்பி புரியலை? நீங்க எல்லாம் எப்படி பட்டவங்கன்னு எனக்குத் தெரியாதா?
“உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.” --- குறள் 1143; அதிகாரம் – அலர் அறிவுறுத்தல்
ஊரறிந்த கௌவை உறாஅதோ = ஊர் முழுதும் எங்களைப்பற்றிய பழிப்பேச்சு நிகழாதோ?
அதனை = “__________” (கோடிட்ட இடத்தை கற்பனையால் நிரப்பி பொருள் காண்க);
நீர்த்து = தன்மைத்து, போல;
பெறாஅது பெற்றன்ன நீர்த்து = (அதுபோதும்) எனக்கு கிடைக்காதது எனக்கு கிடைத்தாற் போல.
ஊர் முழுதும் எங்களைப்பற்றிய பழிப்பேச்சு நிகழாதோ? அது மட்டும் நடந்தது என்றால் “__________” இன்பம் கிடைக்காதது எனக்கு கிடைத்தாற் போல!
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comentarios