10/09/2022 (559)
கீழ் வரும் சொல் ஆராய்ச்சியெல்லாம் பலமுறை நாம் சிந்தித்துள்ளோம். ஒரு மீள்பார்வைக்காக மீண்டும்:
‘அம்’ என்றால் அழகு. அம்மா என்றால் மிகவும் அழகானவள். ‘மா’ என்றால் மிக, பெரிய, உயர்ந்த என்று பொருள்.
‘இழ்’ என்றால் மலர்தல், வெளிப்படுதல். ‘இழ்’ என்ற வேர் சொல்லில் இருந்து வந்தது ‘இழை’.
அம்+இழ் = அமிழ். அமிழ் என்றால் அழகாக வெளிப்பட்ட பொருள். அமிழ்து (elixir, nectar) என்றால் சிறப்பானது, அழகானது.
அமிழ்து அழகாக சுருங்கி ‘அமுது’ ஆனது.
தம்+இழ் = தமிழ். தம்மில் இருந்து, அதாவது இயல்பாக, வெளிப்பட்டது, தமிழ்.
அ+ம்ரிட் = அம்ரிட். ‘அ’ - ஒரு சொல்லை எதிர்மறையாக ஆக்க பயன்படும் எழுத்து.
நியாயத்துடன் ‘அ’வைச் சேர்த்தால் அநியாயம்.
‘மலம்’ என்றால் குறை, அழுக்கு. அமலா/அமலன் என்றால் குறையற்றவள்/குறையற்றவன்.
‘ம்ரிட்’ என்றால் மரணம், சாவு. ‘அம்ரிட்’ என்றால் சாகா. மரணத்தை வெல்லக்கூடிய பொருள். அம்ரிட் என்ற சொல் அமிர்தம் ஆனது.
இது நிற்க.
‘அமிழ்து’ என்னும் சொல் திருக்குறளில் பல இடங்களில் பயின்று வந்துள்ளது. அதிலும் குறிப்பாக இன்பத்துப்பாலில் நிறைய!
‘தோள்’ என்பது ஒரு குறியீடு. ‘தோள்/தீண்டல்’ என்று வருமிடமெல்லாம் ஐம்புலன்களால் தீண்டுவதைக் குறிக்கும்.
இன்பத்துப்பாலில் வரும் ‘பேதை’ என்ற சொல் குறிப்பது சின்னப் பெண், அப்பாவி, ஒன்றும் அறியாதவள் என்ற முறையிலே வருகிறது. பேதைப் பருவம் என்பது 1-8 வயது பருவம்.
இது நிற்க. நாம் புணர்ச்சி மகிழ்தலுக்கு வருவோம்.
“அவளைத் தீண்டும் போதெல்லாம் வாடியிருக்கும் என் உயிர் தளிர்கிறது, புத்துணர்ச்சி பெறுகிறது. அவள் என்ன அமிழ்தமா?” என்று அவன் கேட்கும்படியான ஒரு குறள்:
“உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.” --- குறள் 1106; அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்
அவளுடன் இணையும் போதெல்லாம் என் உயிர் தளிர்கிறது. ஆகையால், அவள் சிறப்பான ஒன்றில் இருந்து தோன்றியவள் என்றே நினைக்கிறேன்.
உறுதோறு தீண்டலால் உயிர்தளிர்ப்ப= (அவளுடன்) இணையும் போதெல்லாம் என் உயிர் தளிர்கிறது; பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள் = அவள் சிறப்பான ஒன்றில் இருந்து தோன்றியவள் (என்றே நினைக்கிறேன்)
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments