உறின்நட்டு ... குறள் 812
05/01/2022 (314)
“தமக்கு உறுவது பார்ப்பார்”
நமக்கு என்ன கிடைக்கும் என்று பார்த்து நட்பு கொள்பவர்கள் தான் ‘தமக்கு உறுவது பார்ப்பார்’. எரிகிற விட்டில் பிடுங்கியவரை லாபம் என்பதுதான் அவர்களின் நோக்கம்.
அவர்களைக் குறித்து அடுத்த இரண்டு குறள்களில் எச்சரிக்கிறார். ஒன்று: அவர்களுடன் நட்பு இருந்தால் என்ன? போனால் என்ன? என்று கேட்கிறார். இரண்டு: அந்த மாதிரி நபர்கள் வலைவீசும் விலைமகளிர்க்கும், கன்னமிடும் கள்வருக்கும் ஒப்பாகும் என்கிறார். ஏமாறும் தருணத்தை ஏற்படுத்தி ஏப்பம் விடுபவர்கள்தான் இருவகையினரும். எச்சரிக்கை.
“உறின்நட்டு அறின்ஒரூஉம் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.” --- குறள் 812; அதிகாரம் – தீ நட்பு
உறின்நட்டு = தனக்கு ஏதாவது கிடைக்கும் என்றால் நட்பு பாராட்டி; அறின் ஒரூஉம் =அவ்வாறு கிடைக்க வழி இல்லையென்றால் பிரிந்து செல்லும்: கேண்மை பெறினும் இழப்பினும் என் = நட்பை பெற்றால் என்ன? இழந்தால் என்ன?
Please don’t care too much. அதைப் பற்றி வருந்தாதீர்கள். இரண்டு செய்திகள்: 1. அந்த நட்பால் பயன் இல்லை; 2. அந்த நட்பு பிரிந்து செல்லும் போது அதை நினைத்து, இப்படி ஏமாந்துவிட்டோமே என்று நாம் குழம்பி நம்மையே வருத்திக் கொள்ளவும் கூடாது. வந்த நோய் அகன்றது என்று மகிழ்தல் வேண்டும். அடுத்த முறை கவனமாக இருக்க வேண்டும்.
பசு மாட்டைக் கொடுத்தால் பல்லைப் பிடித்து பார்த்தானாம். – இது பழமொழி
மாட்டுக்கும் 32 பல்தான். Incisors, premolar, molar - முன்வாய் பற்கள், முன்முனைப் பற்கள், கடைவாய் பற்கள் என்று மூன்று வகையானப் பற்கள் இருக்கும். நமக்கு நான்கு வகையான பற்கள். Canine – கோரைப் பற்கள் என்ற சிறப்புவகை ஒன்று அதிகம். கடிச்சு கிழிப்பதற்கு!
மாட்டுக்கு என்ன வித்தியாசம் என்றால் முன்வாய் பற்கள் அதற்கு கீழ் தாடையில் மட்டுமே இருக்கும். இதைப் பார்த்துதான் அதன் வயதை நிர்ணயிப்பார்கள். இந்தப் பற்களைக் கொண்டுதான் அசை போடும்.
நாம பற்களைப் பயன்படுத்தாம அவசரமாக முழுங்கி வைப்பதாலேதான் எல்லா பிரச்சனைகளும் வருதுன்னு சொல்றாங்க. அதனாலேதான், நமக்கு வயதைக் கண்டுபிடிக்க ரொம்ப சிரமப்பட வேண்டாம். பார்த்தாலே கண்டுபிடிச்சுடலாம்!
பாருங்க வாயைத் திறந்துட்டு பல்லு பின்னாடி போயிட்டேன். நேரமாயிட்டுது. தொடருவோம் நாளை.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன்
