உலகத்தோடு நற்பொருள் நன்குணர்ந்து ... 140, 1046
28/01/2022 (337)
“ஏழையின் சொல் அம்பலம் ஏறாது” என்பது ஒரு பழமொழி. என்னதான், புலவராக இருந்தாலும், ஆராய்ந்து மெய்ப்பொருளை வெளிக் கொணர்ந்தாலும் எழையாக இருந்தால் அவர்களின் சொல்லுக்கு மரியாதை இல்லை.
அப்போ, எப்படி இருந்தால் அம்பலம் ஏறுமாம்?
இரண்டு அல்லகைகள் புகழ் பாடிக்கொண்டே பக்கத்தில் வரனுமாம்
விரல் நிறைய மோதிரங்கள் போட்டிருக்கனுமாம், இடுப்பிலே
நல்ல பருத்தியோ, பட்டோ கட்டி இருக்கனுமாம், அவர் சொல்கின்ற கவிதை
விஷமாக இருந்தாலும், வேம்பாக இருந்தாலும் சூப்பர் கவிதைப்பா இதுன்னு ஊர் சொல்லுமாம்.
இது சாரி, கொஞ்சம் ஓவர் மாதிரி இருக்கு இல்லையா?
நான் சொல்லைங்க, நம்ம ஔவைபெருமாட்டி சொன்னது இது. (எப்போ சொன்னாங்கன்னு சொன்னா அது ஒரு பெரிய கதையாயிடும். அதை அப்புறமா பார்க்கலாம்.)
“விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும், அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர் கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.”
பேச்சுக்கு மதிப்பு வேண்டுமா? அப்போ வறுமையை ஒழிங்க. எப்படி?
அதற்குதான், கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி என்றார்கள். ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என்றார்கள்.
என்னத்தை மாற்ற? என்றால், எண்ணத்தை மாற்ற வேண்டும். சரி, இது நிற்க.
நல்கூர்ந்தார் என்றால் வறியவர் என்று பொருள். நல்லதைச் சொல்பவர்கள் என்று பொருள் எடுக்கக் கூடாது.
வறுமையில் இருந்து கொண்டு, நல்ல கருத்துகளை, நன்றாக உணர்ந்து சொன்னாலும், அச்சொற்கள் தளர்ந்து போகுமாம். சொல்வது நம் பேராசான்.
“நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.” --- குறள் 1046; அதிகாரம் – நல்குரவு
தப்புதான். என்ன செய்ய? உலகம் அப்படித்தான் இயங்குகிறது.
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்.” --- குறள் 140; அதிகாரம் – ஒழுக்கமுடைமை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்= உலகத்தோடு பொறுந்தி வாழ கற்காதவர்கள்; பல கற்றும் அறிவிலாதார் = பல கலைகளைக் கற்றும் புத்தி கொஞ்சம் மட்டுதான்.
உஷாராக இருக்கனும். ஆடை அணியா ஊரில் ஆடை அணிந்தவன் முட்டாள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
