10/11/2022 (616)
வலியறிதல் அதிகாரத்தைத் தொடர்ந்து காலமறிதல் 49ஆம் அதிகாரம்.
இதன் முதல் குறளில் என்ன சொல்கிறார் பேராசான் என்றால், பகல் நேரத்தில் வலிமையான ஆந்தையாரைக்கூட காகம் வென்றுவிடுமாம். அதைப்போல, மாற்றாரை வெல்ல வேண்டும் என்று என்னும் தலைவன் அதற்கு சரியான காலத்தைக் கணிக்க வேண்டுமாம்.
இந்தக் குறளை நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம். காண்க 04/04/2021. மீள்பார்வைக்காக:
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.” ---குறள் 481; அதிகாரம் - காலமறிதல்
கூகையைக் காக்கை = ஆந்தையைக் காக்கை; பகல்வெல்லும் = பகலிலே வென்று விடும்; இகல் = மாற்றார்(ஐ); வெல்லும் வேந்தர்க்கு = வென்று விட நினைக்கும் தலைவனுக்கு; பொழுது வேண்டும் = சரியான காலம் வேண்டும்.
இது நிற்க.
‘ஒழுக்கு’ என்றால் ஒழுகிக் கொண்டே இருக்க வேண்டும். உயர்ந்த நிலையில் இருந்து தவறாமல் ஒழுகுவது ஒழுக்கம். ஒழுக்கு என்பது எப்போதும் நடை பெற வேண்டும். அப்போதுதான் அதை ‘ஒழுகல்’ என்று அழைக்கலாம்.
ஒழுகலுக்கும் மேலே ஒரு செயல் இருக்கிறது. அதுதான் “ஒட்ட ஒழுகல்”. அதாவது, பொறுந்தி ஒழுகுவது. ஒட்ட ஒழுகலுக்கு நம்பேராசான் இரண்டு குறிப்புகளைத் தருகிறார்!
பலவற்றைக் கற்றிருந்தாலும், உலகத்தோடு ஒட்ட ஓழுக வேண்டுவது முக்கியம் என்கிறார். இல்லை என்றால் அறிவு கொஞ்சம் குறைவுதானாம். நாம் ஏற்கனவே பார்த்தக் குறள்தான் இது. காண்க 28/01/2022 (337).
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்.” --- குறள் 140; அதிகாரம் – ஒழுக்கமுடைமை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்= உலகத்தோடு பொறுந்தி வாழ கற்காதவர்கள்; பல கற்றும் அறிவிலாதார் = பல கலைகளைக் கற்றும் புத்தி கொஞ்சம் மட்டுதான்.
மற்றுமொரு குறிப்பை இந்தக் காலமறிதல் அதிகாரத்தின் இரண்டாம் குறளில் சொல்கிறார்.
செல்வமானது ஒருவரிடமும் நில்லாது ஓடிக்கொண்டே இருக்குமாம். அந்தச் செல்வத்தை நம்மை விட்டு ஓடாமல் கட்டி வைக்கும் கயிறு வேண்டுமா? என்று கேட்கிறார் நம் பேராசான்.
யாருக்குத்தான் வேண்டாம்! கேட்போம் நம் பேராசான் சொல்வதை!
உலகதோடு ஒட்ட ஒழுகினால் மட்டும் போதாது. அந்த, அந்தக் கால நிலைகளுக்கும் ஏற்றார் போல் ஒட்ட ஒழுக வேண்டுமாம். அதுதான் செல்வத்தை நம்மைவிட்டு நீங்காமல் கட்டி வைக்கும் கயிறாம்!
அதாவது, உலகத்தோடும், காலத்தோடும் இணங்கி ஒழுகினால் நம்மை யாரும் அடித்துக் கொள்ள முடியாது.
“பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.” --- குறள் 482; அதிகாரம் – காலமறிதல்
ஆர்க்கும் = பிணைக்கும்; திருவினை = செல்வம்;
திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு = நிலையில்லா செல்வத்தை, முடிவில்லா செல்வமாக நம்முடன் பிணைக்கும் கயிறு (எது என்றால்);
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் = காலத்தோடு ஒட்டி ஒழுகுவதுதான்.
நிலையில்லா செல்வத்தை, முடிவில்லா செல்வமாக நம்முடன் பிணைக்கும் கயிறு, எது என்றால், காலத்தோடு ஒட்டி ஒழுகுவதுதான்.
சில வெற்றியாளர்கள் இருப்பார்கள். அவர்களின் கருத்துகள், காலத்தை முந்திய கண்டுபிடிப்புகளாகவும், சிந்தனைகளாகவும் இருக்கும். அதாவது, ahead of time ஆக இருக்கும். அவர்கள். தக்க காலம் வரும்வரை பொறுத்திருந்து தக்கத் தருணத்தில் வெளிப்படுத்தி வெற்றி காண்பார்கள்.
சரியான நேரமும், வாய்ப்பும் சந்திக்கும் நேரம்தான், அதிர்ஷ்ட தேவதை நம்மை நோக்கி கண்ணடிக்கும் நேரம்!
அதற்காகத்தான், நாம் எப்போது ஒழுகிக் கொண்டே இருக்க வேண்டும். வாய்ப்புகளுக்கு எப்போதும் வாசலைத் திறந்தே வைக்க வேண்டும்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments