உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று ... 181, 1121
03/01/2022 (312)
உலகநீதி என்று ஒரு நூல் இருக்கிறது, இதனை இயற்றிய பெருமானார் உலகநாதர் என்றும் இயற்றிய காலம் 16ஆம் நூற்றாண்டு அல்லது 18ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள்.
அந்தப் பாடல்களை நாம் சிறு வயதில் பள்ளியில் படித்திருப்போம்.
“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்… “பாடல் 1, உலகநீதி, உலகநாதர்
இந்தப் பாடலைக்கேட்ட வடலூர் வள்ளல் பெருமானுக்கு ஒரு நெருடல். பள்ளியில் சொல்லிக்கொடுக்கும் இந்தப் பாடலில் ‘வேண்டாம், வேண்டாம்’ என்று ஒவ்வொரு வரியிலும் சொல்கிறார்களே அது சரியல்லவே என்று தோன்றியதாம். கருத்து சரியானதாக இருந்தாலும் வார்த்தைகள் விளைவிக்க கூடிய எண்ணங்கள் எதிர்மறையாக இருப்பதை மாற்ற வேண்டும் என்று அவர் சென்னை கந்தகோட்டத்தில் இருந்தபோது தன் நண்பர்களிடம் சொல்ல, அவர்கள், வள்ளல் பெருமானையே அதுபோல ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களாம்.
அதற்கு அவர் எழுதிய பாடல் தான் ‘ஒருமையுடன் நினது …’ என்று ஆரம்பிக்கும் பாடல். ஒவ்வொரு வரியிலும் வேண்டும், வேண்டும் என்றே முடிப்பார்.
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்! ….
அதாவது, வார்த்தைகள்தான் வாழ்க்கை. வாக்கு பற்றி நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். 15/06/2021 (113) மற்றும் 17/06/2021 (115) பதிவுகளில் காணலாம்.
சரி, ஏன் இது எல்லாம் என்று கேட்கிறீர்களா, நட்பாரய்தல் அதிகாரத்தில் ஆராயவேண்டும் என்று சொன்ன நம் பெருந்தகை, விலக்க வேண்டிய இரண்டை விளக்க வேண்டி விரிக்கிறார் இரு அதிகாரங்களில். தீநட்பு (82), கூடாநட்பு (83).
இந்த இரு அதிகாரங்களில் நம் பேராசான் சொல்வது “உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்கிற தீநட்பும், கூடாநட்பும்தான்.
இவ்விரு அதிகாரங்களில் வரும் குறள்களைக் குறித்து தொடர்ந்து சிந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
