top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் ... 294, 292, 293

05/01/2024 (1035)

அன்பிற்கினியவர்களுக்கு:

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். இதைக் கவனம் வைக்கணும்.


“கண்ணே, நீ கொஞ்சம் நயன்தாரா மாதிரி இருக்கே” என்றால் அது பொய்யா? நிச்சயம் இல்லை. பொய் சொல்லமாட்டான் இந்த அரிச்சந்திரன்!

 

உண்மைதான். எப்படி? கொஞ்சம்தானே நயன்தாரா! மிச்சம் “என் தாரா” மாதிரிதான் இருக்கே என்பது அதன் உள்பொருளாக இருக்கலாம்.


இருந்தாலும், அந்த நொடி, ஒரு மகிழ்ச்சி பிறப்பதில்லையா!


உடனடியாக, உங்களுக்கு ஒரு சூடான காபியோ, டீயோ கிடைக்கலாம். அப்போதைக்கு அப்போது அந்தப் பொய்களைச் சொல்லிப் பழகினால் உங்கள் வாழ்க்கைப் பயணம் உராய்வின்றிப் போகும். புரை தீர்ந்த நன்மையும் பயக்கலாம். பொய்க்கும் இரு விதிகள் உண்டு என்பதனையும் பார்த்தோம். அவை யாவன:

 

  1. பிறர்க்கு நன்மை பயக்கும் என்றால் கொஞ்சம் பொய் சொல்லலாம்;

  2. தீமை பயக்கும் என்றால் உண்மையைச் சொல்லாமல் (இதுவும் பொய்தான்) அமைதியாகலாம்.

காண்க 13/04/2021.

 

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின். -292;  - வாய்மை

 

பொய் வஞ்சனையாகச் சொல்லக் கூடாது. அஃதாவது, குழப்பம் விளைவிக்கும் என்று தெரிந்தும் பொய் சொல்வது கூடாது. அஃதாவது சிலரை மறச்செயல்கள்  செய்யும்விதமாக உணர்ச்சிகளைத் தூண்டிவிட பொய் சொல்வது. அல்லது, தன் நண்மைக்காக உண்மைக்கு மாறான செய்திகளைத் தெரிவித்துப் பயன் பெறுவது போன்றன.


தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்தபின்

தன்னெஞ்சே தன்னைச் சுடும். – 293; - வாய்மை

 

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க = பொய்தான் என்று தெரிந்தே அந்தப் பொய்யைச் சொல்வது பெரும் பிழை. அதனைத் தவிர்க்க; பொய்த பின்

தன் நெஞ்சே தன்னைச் சுடும் = அவ்வாறு பொய்யைச் சொன்னபின் நம் உடலில் பல மாற்றங்கள் நிகழும். அம் மாற்றங்கள் நம் மனத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தும். அதை எண்ணும் போதெல்லாம் நம் மனமும் உடலும் குறுகும் – ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் துன்பத்தை விளைவிக்கும். இது நிச்சயம் நிகழும்.

 

பொய்தான் என்று தெரிந்தே அந்தப் பொய்யைச் சொல்வது பெரும் பிழை. அதனைத் தவிர்க்க. அவ்வாறு பொய்யைச் சொன்னபின் நம் உடலில் பல மாற்றங்கள் நிகழும். அம் மாற்றங்கள் நம் மனத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தும். அதை எண்ணும் போதெல்லாம் நம் மனமும் உடலும் குறுகும் – ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் துன்பத்தை விளைவிக்கும். இது நிச்சயம் நிகழும்.

 

சரி, உள்ளமறிந்து பொய் சொல்லாமல் இருந்தால் என்ன ஆகும்?

 

உலகத்தில் உள்ள சான்றோர்கள் உள்ளத்துள் எல்லாம் நிறைந்திருப்பர் என்கிறார்.

 

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன். – 294; - வாய்மை

 

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் = உள்ளத்தில் கரவு இல்லாமல் உண்மையோடு வாழ்பவர்கள்; உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்

= உலகத்தில் உள்ள சான்றோர்களின் உள்ளத்தில் எல்லாம் நிலைத்திருப்பர். வாழ்த்தப்படுவர்.

 

உள்ளத்தில் கரவு இல்லாமல் உண்மையோடு வாழ்பவர்கள், உலகத்தில் உள்ள சான்றோர்களின் உள்ளத்தில் எல்லாம் நிலைத்திருப்பர். வாழ்த்தப்படுவர்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




コメント


bottom of page