உள்ளியது எய்தல் எளிது... குறள்கள் 540, 596, 666
30/11/2021 (280)
வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு இலக்கு வேணும்.
சின்ன வெற்றிக்கு சின்ன இலக்கு. அப்போ, பெரிய வெற்றிக்கு?
பெரிய இலக்கா? இல்லை, அதுவும் சின்ன இலக்குதான். என்ன ஒன்று, சின்ன, சின்ன இலக்குகளாகக் கடந்தால் அதுவும் சின்ன இலக்குதான். தொடருவதில்தான் இருக்கு ரகசியம்.
“A journey of thousand miles begins with a single step” ன்னு சொல்கிறார்கள்.
நம்ம ஊரிலே “எறும்பு ஊர கல்லும் குழியும்” ன்னு சொல்கிறார்கள். எறும்புக்கு ஏது வலிமை? எறும்பார் தொடர்ந்து ஊருவதால் கல்லும் தேய்ந்து போகுது. தொடருவதில்தான் இருக்கு ரகசியம்.
எதையும் தொடர வேண்டும் என்றால் போயிட்டே இருக்கனும் என்பதை மறக்கக்கூடாது. அந்த மறதியைத்தான் ‘பொச்சாப்பு’ என்கிறார் நம் பேராசான். அது மட்டும் இல்லை என்றால் நாம நினைப்பது நடக்குமாம். அதுவும் எப்படி?
எளிதாக நடக்குமாம். எறும்பார் எப்படி கல்லை காலி பண்ணுகிறாரோ அது போல!
பொச்சாவாமை அதிகாரத்தின் கடைசிக் குறள்:
“உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.” --- குறள் 540; அதிகாரம் – பொச்சாவாமை
தான் உள்ளியது எய்தல் எளிது மன் = நினைப்பதை அடைவது எளிதாம்; உள்ளியது உள்ளப் பெறின் = தொடர்ந்து அதனையே நினைத்து செயல்பட்டுக் கொண்டே இருந்தால்
சரி எதை ‘உள்ளனும்’? நாம ஏற்கனவே பார்த்ததுதான் (இங்கேயும், மற்றும் இங்கேயும் காணலம்):
“உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.” --- குறள் 596; அதிகாரம் – ஊக்கமுடைமை
நினைப்பதிலேயெ நீங்க கில்லாடியாயிட்டா? நினைச்சது நினைச்ச மாதிரியே கிடைக்குமாம். நினைச்சது கிடைப்பது ஒன்று; அது நினைத்த மாதிரியே கிடைப்பது சிறப்பு இல்லையா? இந்த குறளில் இருந்துதான் இந்தத் தொடரே ஆரம்பித்தது! (இங்கே காணலாம்)
“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.” --- குறள் 666; அதிகாரம் – வினைத்திட்பம்
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
