26/06/2022 (485)
துஞ்சினார், செத்தார், நஞ்சுண்டார், கள்ளுண்டார் – இதையெல்லாம் எடுத்து விளக்கி, கள்ளு குடிக்காதீங்க தம்பிகளா என்று சொன்னார் நம் பேராசான்.
நம்மாளு: ஐயா, எனக்கு ஒரு சந்தேகம். நீங்க எப்ப பார்த்தாலும் என்னையே சொல்வது போல இருக்கு. நம்ம பேராசான், இது வரை சொல்லியிருக்கிற கள்ளுண்ணாமை குறள்களில், ஆண், பெண் இருவருக்கும் பொதுப்பட சொன்னமாதிரியே இருக்கு.
நீங்க, ஆண்கள் மட்டும்தான் குடிப்பது போலவும், பெண்கள் அந்தப் பக்கம் போகவே மாட்டாங்க என்பது போலவும் இருக்கு. ஆண் பாலுக்கு உரிய ‘அன்’ விகுதியை இது வரை நம் பேராசான் பயன்படுத்தலை. ரொம்ப அதிகமா பேசியிருந்தால் மன்னிசுடுங்க.
ஆசிரியர்: வாழ்த்துகள் தம்பி. சரியாத்தான் சொல்லியிருக்கீங்க. மகிழ்ச்சி. தமிழ் இலக்கணத்தையும் பிடிச்சிருக்கீங்க என்பதில் உண்மையிலே நான் பெருமை படுகிறேன். வள்ளுவப் பெருந்தகை, எட்டு குறள்களில் ‘அன்’ விகுதியைப் பயன் படுத்தவில்லை என்பது சரிதான்.
கடைசி இருகுறள்களில் மட்டும்தான் ‘களித்தான்’ என்று ஆண் பால் ‘அன்’ விகுதியைப் பயன்படுத்தியுள்ளார். எழுத்துநடையில் பொதுவாக கூறுவதற்கு, இப்போதும், ஆண்பால் பயன்படுத்துகிறோம். இந்த அதிகாரம் ‘கள்ளுண்பவர்களைத் திருத்த’ என்று பொதுவாக எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது குடிப்பவர்கள் அனைவரும் அடங்குவர்.
தற்போது, ஆணுக்கும், பெண்ணுக்கும் சம வாய்ப்பு இருப்பதால் அதைப் பயன்படுத்தி வளர்வதைத் தவிர்த்து, வீழ்வதற்கு சிலர் பயன்படுத்தக்கூடும். அதுதான் சரியென்று வாதிடவும் கூடும். சரியா தம்பி? குறளுக்குச் செல்வோம்.
நம்மாளு: சரிங்க ஐயா. அடுத்த குறள் நாம ஏற்கனவே பார்த்ததுதான்.
காண்க: 28/09/2021 (217)
“உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண் சாய்பவர்.” --- குறள் 927; அதிகாரம் – கள்ளுண்ணாமை
கள்ளொற்றிக் கண் சாய்பவர் = கள்ளு குடிக்கும் போது மறைந்து தான் குடிப்பாங்களாம், அப்புறம்தான் அறிவு மயங்க அலம்பல் பன்ணி மட்டை ஆவார்கள்;
உள்ளுர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் = உள்ளூரில் உள்ளவர்கள் நம்மாளின் உள் அடி தெரிந்து கொண்டு எப்போதும் ஏளனமாகச் சிரிப்பாங்க
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comentarios