28/02/2024 (1089)
அன்பிற்கினியவர்களுக்கு:
தம் கண்கள் துன்பப்படுவதைப் போல நினைந்து ஓஒ இனிது என்றாள் குறள் 1176 இல்.
அவள் அமைதியடையவில்லை. அடுத்து அந்தக் கண்களுக்குச் சாபம் இடுகிறாள். அன்று விரும்பி, விரும்பி அவர் பின்னே சென்ற கண்கள் இன்று வருந்தி வருந்தித் துன்பம் அடையட்டும் என்கிறாள்.
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண். – 1177; - கண் விதுப்பு அழிதல்
விழைந்து இழைந்து = விரும்பி, அவரைப் பார்த்து அப்படியே உருகி;
வேண்டி அவர்க் கண்ட கண் = அவர்தாம் வேண்டும் என்று அவரை விழுங்கிய கண்கள்; உழந்து உழந்து உள்நீர் அறுக = அவரின் இரக்கமற்ற இந்தப் பிரிதலை நினைந்து வருந்தி வருந்திக் கண்ணீர் வடித்து அக் கண்ணீரும் வற்றிப் போகட்டுமாக.
விரும்பி, அவரைப் பார்த்து அப்படியே உருகி, அவர்தாம் வேண்டும் என்று அவரை விழுங்கிய கண்கள், அவரின் இரக்கமற்ற இந்தப் பிரிதலை நினைந்து வருந்தி வருந்திக் கண்ணீர் வடித்து அக் கண்ணீரும் வற்றிப் போகட்டுமாக.
மேலும் தொடர்கிறாள். அவர் உள்ளத்தால் விரும்பவில்லை என்று இன்னும் இந்தக் கண்களுக்குத் தெரியவில்லை என்கிறாள்.
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண். – 1178; - கண் விதுப்பு அழிதல்
பேணாது பெட்டார் உளர் மன்னோ = உள்ளத்தால் விரும்பாமல் உதட்டளவில் விரும்புபவர்களும் இருக்கிறார்களே! அது இன்னும் இந்தக் கண்களுக்குத் தெரியவில்லை; மற்று அவர்க் காணாது அமைவில கண் = அது புரியாமல், அவரைக் காணாமல் அமைதியாக மாட்டேன் என்று கிடந்து துடிக்கிறது.
உள்ளத்தால் விரும்பாமல் உதட்டளவில் விரும்புபவர்களும் இருக்கிறார்களே! அது இன்னும் இந்தக் கண்களுக்குத் தெரியவில்லை. அது புரியாமல், அவரைக் காணாமல் அமைதியாக மாட்டேன் என்று கிடந்து துடிக்கிறது.
இந்தக் கண் இருகிறதே அது பேதையிலும் பேதை. அவர் வரவில்லை என்றாலும் தூங்காது; அவர் வந்துவிட்டாலும் எப்போது போய் விடுவாரோ என்று தூங்காது; அந்த இரண்டு வழியும் பெரிய துயரம் உறுகிறது என் கண் என்றாள். இந்தக் குறளை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 09/03/2022. மீள்பார்வைக்காக:
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். - 1179; - கண் விதுப்பு அழிதல்
நம் பேராசான் அடுத்து இந்த அதிகாரத்தை முடிக்க வேண்டும். கண்ணும் அவளும் வேறல்ல என்பதனைச் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்லப் போகிறார்? நாளைப் பார்க்கலாம்.
நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments