20/01/2022 (329)
எல்லாருக்கும் தன் கையால் உழவு செய்து ஈவார். ஆனால், இரவார்ன்னு உழவர்களின் சிறப்பைச் சொன்ன வள்ளுவப் பெருமான் மேலும் ஒரு குறிப்பைக் கொடுக்கிறார்.
இல்லறத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் துணை என்று நமக்குத் தெரியும். எல்லாவற்றையும் விட்டு விட்டோம் எனும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லையாம் உழவர்கள் தங்கள் கைகளை மடக்கிக் கொண்டால் என்கிறார்.
“உழவினார் கைமடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை.” --- குறள் 1036; அதிகாரம் - உழவு
உழவினார் கைமடங்கின் = உழவு செய்பவர்கள் தங்கள் கைகளை, உழவு செய்யாமல், மடக்கிக் கொண்டால்; விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கும் நிலை இல்லை = விரும்பும் பொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டோம் என்று சொல்லும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை; நிலை = வாழ்வு
உழவர்கள்தான் உலகத்தார்க்கு ஆணி (1032), வாழ்பவர்கள் என்றால் உழவர்கள்தான் மற்றவர்கள் எல்லாம் அவர்கள் பின் தொழுது செல்பவர்கள்தான் (1033), உழவர்கள் குடையின் நீழலின் கீழ்தான் இந்த உலகம் (1034), இரவார் ஒன்று ஈவார் (1035), உழவர்கள் கைமடங்கினால் துறவிகளுக்கும் வழி இல்லை (1036) என்று ஐந்து குறிப்புகளைக் கொடுத்தார் உழவர்களின் சிறப்பிற்கு.
இதுவரை நம்மிடம் சொல்லிக்கொண்டிருந்த வள்ளுவப் பெருமான் அடுத்து உழவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களிடம் சொல்லப் போகிறார். நாமும் கேட்போம். அதில் நமக்கும் சில குறிப்புகளை விட்டுச் செல்கிறார் என்றார் என் ஆசிரியர்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments