உழைப்பிரிந்து ... 530
26/12/2022 (662)
காரண – காரியம் என்பது ஒரு சுழற்சி. காரணத்தால் காரியம் நிகழும்; காரியத்தால் புது காரணங்கள் தோன்றும்; மீண்டும் அதனால் காரியங்கள் நிகழும்!
நாம் இப்போது சுற்றந்தழால் அதிகாரத்தின் கடைசிக் குறளைப் பார்க்க வேண்டும்.
அதற்கு முன், “உழை” என்றால் என்ன பொருள்?
நம்மாளு: ஐயா, இது கூட தெரியாதா “உழை” என்றால் “work” அதாவது வேலை செய்.
“... உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே ...”
-நம்ம புரட்சித் தலைவர் பாடிய பாட்டு!
ஆசிரியர்: மிகவும் சரி. உலகம் சுற்றும் வாலிபன் எனும் திரைப்படத்தில், கவிஞர் புதுமை பித்தன் வரிகளில், M.S. விஸ்வநாதன் அவர்களின் இசையில், T.M.சௌந்தரராஜன் அவர்களின் குரலில் வெளிவந்தப் பாடல். “சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே...”
“உழை” என்ற வினைச்சொல்லுக்கு (verb) வேலை செய் என்பது பொருள்.
அந்த “உழை”யே பெயர்ச்சொல்லாக (noun) வந்தால் என்ன பொருள்?
நம்: ங்கே...
ஆசிரியர்: “உழை” என்றால் இடம், அருகில், அண்மை, பக்கம், ஆண்மான், பூவிதழ், உப்பு மண், ஏழு சுரங்களுக்குள் மத்திம சுரம் (நான்காவது சுரம்) இப்படி பல பொருள்கள் இருக்கு.
‘உழைப் பிரிந்து’ என்றால் நம் அருகில் இருந்து பிரிந்து என்று பொருள்.
சரி நாம் குறளுக்கு வருவோம்.
“உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.” --- குறள் 530; அதிகாரம் – சுற்றந்தழால்
உழைப்பிரிந்து = (ஏதோ ஒரு தவறுதலான புரிதலால், வலுவான எந்த ஒரு காரணம் இன்றி) தலைவனிடம் இருந்து பிரிந்தவன்; காரணத்தின் வந்தானை வேந்தன்= (அதை உணர்ந்து) மீண்டும் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற காரணத்தால் வந்தானைத் தலைவன்; இழைத்து இருந்து எண்ணிக் கொளல் = சீர் தூக்கிப் பார்த்து, ஆராய்ந்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிரிந்து சென்று மீண்டும் வருபவர்களையும் அணைத்துக் கொள்ள வேண்டும் என்றதனால் கூறப்பட்டது. அதே சமயம், சற்று ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லி சுற்றந்தழாலை முடிக்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
