02/10/2022 (580)
கண்ணைச் சிமிட்டினால் காணாமல் போவார்; கண்ணுக்கு மையிட்டால் அந்தக் கண நேரம் மறைவார்; என் உள்ளே உறையும் என்னவருக்கு சூடான உணவை நான் சாப்பிட்டால் அவருக்குத் தாங்குமோ? என்றெல்லாம் அன்பின் உச்சியில் இரண்டறக் கலந்து நிற்கிறாள் அவள்!
உண்மை நிலை என்னவென்றால் அவன் அருகில் இல்லை என்பதுதான். அதை ஏற்றுக் கொள்ளாத அவளின் மனம் காட்ச்சிப்பிழைகளால் ஆறுதல் கொள்கிறது.
ஆனாலும், வெளிறிய அவள் உடலும், உள்ளமும் மற்றவர்களுக்கு கவலை அளிக்கும்விதமாக இருக்கின்றது. இதை எடுத்துச் சொன்னத் தோழிக்கு மறுப்புரையாக சொல்வதுபோல் முடிவாக ஒரு பாடலைச் சொல்கிறாள்.
இது எங்கள் தனிப்பட்ட வாழ்வு. எனக்குத் தெரியும் அவர் என்னுள்ளேயே மகிழ்ந்து தங்கியிருக்கிறார். அது புரியாமல்தான் இந்த ஊர் அவரை அன்பில்லாதவர் என்று தூற்றுகிறது.
“உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ்வூர்.” --- குறள் 1130; அதிகாரம் – காதல் சிறப்பு உரைத்தல்
உள்ளத்துள் என்றும் உவந்துறைவர் = என் உள்ளத்துள் எப்போதும் மகிழ்ந்து என்னுடனே தங்கி இருப்பவர் அவர்;
இவ்வூர் ஏதிலர் இகந்துறைவர் என்னும் = (ஆனால்) இந்த ஊர் அவரை அன்பில்லாதவர் என்றும், அதனால் அவர் பிரிந்து விட்டார் என்றும் சொல்லும்.
என் உள்ளத்துள் எப்போதும் மகிழ்ந்து என்னுடனே தங்கி இருப்பவர் அவர். ஆனால், இந்த ஊர் அவரை அன்பில்லாதவர் என்றும், அதனால் அவர் பிரிந்து விட்டார் என்றும் சொல்லும். அதிலே அவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ? ஆனால் நான் மிகவும் என் காதலவரின் காதலினால் மகிழ்ந்தே இருக்கிறேன்.
அவள் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்!
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments