13/09/2022 (562)
காதலில் வீழ்ந்தவர்கள் எதை, எதை கற்கிறார்கள்? (அல்லது) என்ன பயன்களைப் பெறுகிறார்கள்? (2 மதிப்பெண் வினா. இரண்டு வரிகளுக்கு மிகாமல் எழுதுக)
என்ன கேள்வி இது?
இந்தக் கேள்வியை நம் பேராசானிடம் யாரோ கேட்டு இருக்கிறார்கள். அவரின் பதிலைப் பார்க்கும் முன்:
இணைந்து பயனிக்க நினைப்பவர்களுக்கு பல படி நிலைகள் இருக்கும். முதலில் கவரப் படுவார்கள். கருத்து ஒருமித்தல் இருக்கிறது என்று நினைப்பார்கள். சிறிது காலம் போனபின் கருத்துகளில், காட்சிகளில் முரண்/பிழை ஏற்படும்.
அது கொண்டு, இருவரிடை சண்டை வரலாம். இணைந்து செல்வதால் வரும் நல்லவைகளையும், வல்லமைகளயும் அறிந்து சமாதானம் அடைவார்கள். இன்பமும் பிறக்கும்! வெற்றிகளும் கிடைக்கும்.
தங்கள் பயனத்தை மேலும் தொடர்வார்கள். அத்துடன் சண்டை, கருத்து வேறுபாடு, காட்சி பிழைகள் வராதா என்றால் வரும். வந்தாலும், அதனைத் தீர்க்க அவர்களின் முன் அனுபவம் உதவும். இது ஒரு தொடர் வளர்ச்சி/பயணம்.
இந்தப் படிப்பினைகள், அனைவருக்கும் தேவையான வாழ்க்கைத் திறனை (life skill) வளர்க்கும். விட்டுக் கொடுத்து பயணிப்பதை உணர்வார்கள்.
இவைகளை காதலில் வீழ்ந்தவர்கள் மிக விரைவாகவே கற்றுக்கொள்வார்களாம்!
நம் பேராசானின் பதில் இதோ:
“ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.” --- குறள் 1109; அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்
ஊடல் உணர்தல் புணர்தல் = சண்டை, சமாதானம், பின் கூடுவது;
இவைகாமம் கூடியார் பெற்ற பயன் = இவை காதலில் இணைந்தவர்கள் பெறும் பயன்.
ஊடல், உணர்தல், இணைந்து வெற்றி கொள்ளல் என்பது காதலர்களுக்கு மட்டும் சொந்தமா என்ன? எல்லோருக்கும் இது பொது என்றாலும், அவர்களுக்கு அனுபவம் அதிகமாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comentários