28/06/2024 (1210)
அன்பிற்கினியவர்களுக்கு:
தோற்பவர்களும் வென்றவர்களாகவே கருதப்படுவர். விட்டுக் கொடுப்பதும் ஒரு வெற்றியே.
மிக அருவருப்பான செயல்கள் மூன்று என்று பார்த்துள்ளோம். காண்க 07/12/2023. மீள்பார்வைக்காக:
அவை யாவன: 1. மகளுடன் போட்டிப்போட்டுக் கொண்டு தன்னை மிகுதியாக அழகு படுத்திக் கொள்ளும் தாய்; 2. உணவுக்காக மகனுடன் போட்டி போடும் தகப்பன்; 3. மாணவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தன் அறிவின் மிகுதியைத் தெரிவிக்கத் துடிக்கும் ஆசிரியன்.
காதல் வாழ்வில் மிகக் கீழான செயலாக மேலும் ஒன்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஃதாவது, இணையரை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும், மொக்கையாக்கைவிட வேண்டும் என்பது.
இஃது வாழ்க்கையென்னும் ஓட்டத்தில் இருவரையும் தோற்கடிக்கும். இதனைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். இங்கே இணையரிடம் தோற்றுப் பார்; மகிழ்ச்சி கிடைக்கும் என்றும் வலியுறுத்துகிறார்.
ஊடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலில் காணப் படும். – 1327; - ஊடல் உவகை
ஊடலில் தோற்றவர் வென்றார் = இணையர்களிடையே நிகழும் ஊடல்களில் தோற்றவர்களே வென்றவர்கள்; அது கூடலில் காணப்படும் = அதனைப் பின்னர் அன்புடன் நிகழும் கூடலில் அறிந்து கொள்ளலாம். மன்னு, உம் அசைநிலை.
இணையர்களிடையே நிகழும் ஊடல்களில் தோற்றவர்களே வென்றவர்கள். அதனைப் பின்னர் அன்புடன் நிகழும் கூடலில் அறிந்து கொள்ளலாம்.
உணவிற்கு இனிமையைச் சேர்ப்பதனால் உப்பும் இனிப்பே! உணவிற்கு இறுதியில் உப்பைச் சரி பார்த்து இட்டு முடிப்பதனைப் போல திருக்குறளினையும் உப்பிட்டு முடித்து வைக்கிறார்.
அவன்: இதோ, எங்களுக்குள் காற்று வெளியிடையும் இல்லை. அவளின் அழகிய நெற்றியில் வியர்வைத் துளிகள். இந்தத் தழுவலில் கிடைக்கும் இனிமையினைப் பெறக் காரணமாக இருந்தது நேற்றைய சிறு சிறு ஊடல்கள்தாம். இவ்வின்பம் மீண்டும் கிடைக்க நாளையும் ஊடுவாளோ?
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு. – 1328; - ஊடல் உவகை
உப்பு = இனிமை; நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு = இந்த நெற்றிகளில் வியர்வைத் துளிகள் அரும்பத் தழுவிக் கிடைக்கும் இந்த இனிமையை; ஊடிப் பெறுகுவம் கொல்லோ = மேலும் மேலும் சிறு சிறு ஊடல்களினால் இனியும் பெருக்குவோமா?
இந்த நெற்றிகளில் வியர்வைத் துளிகள் அரும்பத் தழுவிக் கிடைக்கும் இந்த இனிமையை, மேலும் மேலும் சிறு சிறு ஊடல்களினால் இனியும் பெருக்குவோமா?
நாளையுடன் இந்தத் தொடர் நிறைவுறும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளைச் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments