top of page
Search

ஊடி யவரை உணராமை ... 1304, 1303, 15/06/2024

15/06/2024 (1197)

அன்பிற்கினியவர்களுக்கு:

உப்பு

புலவி

நீட்டாதே!

மேலே கண்டது ஹைக்கு கவிதை!

 

அவள் ஏதோ ஊடல் கொள்கிறாள். பிரிவு என்னும் காரணம் இருக்கலாம். அல்லது இன்னபிற காரணங்களும் இருக்கக் கூடும்.

 

நம்மாளு: காரணங்கள் இல்லாமலும் ஊடல் வருமா?

 

வரும். அதனைக் குறித்து அடுத்து வரும் அதிகாரமான புலவி நுணுக்கத்தில் சொல்லுவார். இது நிற்க.

 

அவள் ஏதோ ஒரு காரணத்தால் ஊடல் செய்கிறாள். அவள் எண்ணமும் சிறிது நேரம் அவனைச் சீண்டிப் பார்ப்பதுதான். அது புரியாமல் அவனும் அவளுடன் சண்டை செய்வானாயின், அந்த ஊடலை நீட்டுவானாயின் நன்றாகவா இருக்கும்?

 

ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இருக்கும் அவளுக்கு மேலும் துன்பத்தையே கொடுக்கும்.

 

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்

புலந்தாரைப் புல்லா விடல். – 1303; - புலவி

 

தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் = தம்மிடம் ஊடல் கொண்டு பிரிந்திருப்பவரை  அந்த ஊடலை மாற்றும் விதமாகத் தழுவி அன்பு செய்யாமல் இருப்பது; அலந்தாரை = எது போல என்றால், ஏற்கெனவே பிரிவென்னும் துன்பத்தில் இருந்தவர்க்கு; அல்லல் நோய் செய்தற்றால் = மேலும் துன்ப நோயைக் கொடுப்பதனைப் போல.

 

தம்மிடம் ஊடல் கொண்டு பிரிந்திருப்பவரை  அந்த ஊடலை மாற்றும் விதமாகத் தழுவி அன்பு செய்யாமல் இருப்பது, எது போல என்றால், ஏற்கெனவே பிரிவென்னும் துன்பத்தில் இருந்தவர்க்கு, மேலும் துன்ப நோயைக் கொடுப்பதனைப் போல.

 

ஊடுவதே மற்றவர் இறங்கி வந்து கெஞ்சவும் கொஞ்சவும்மாட்டாரா என்பதுதான்!

 

ஊடியவரின் உள்ளத்தை உணராமல் மக்காக இருந்தால் எப்படி? கொஞ்சம் விழித்துக் கொள். பேசாமல் பேசுவதையும் கவனிக்க வேண்டும். அதில் அன்பு தெரியும். இது புரியாமல், நீயும் மூஞ்சைத் தூக்கிவைத்துக் கொண்டாயானால்?

அந்தக் கொடியோ அன்பென்னும் நீர் இல்லாமல் வாடிப் போயிருக்கிறது. நீ பாராமுகமாக இருந்தால் அந்தக் கொடியின் அடி வேரினையே வெட்டி எரிந்தாற்போல் அல்லவா? என்கிறார்.

 

வள்ளியைப் பார்த்துவிட்டு நாம் குறளைத் தொடர்வோம்.

 

வள்ளிக் கிழங்கு, கொடி (Dioscorea pentaphylla) வகையைச் சார்ந்தது. வள்ளிக் கொடி பல சங்க இலக்கியங்களில் வருகிறது. பாரியின் பறம்புமலையின் (தற்போதைய பிரான்மலை – சிவகங்கை மாவட்டம்) நான்கு வளங்களுள் வள்ளிக் கிழங்கினை முதன்மையாகச் சொல்கிறார்கள். ஏனைய: மூங்கில் -நெல், பலா, தேன் என்று எடுத்துச் சொல்கிறது புறநானூறு.

 

ஐந்திணை ஐம்பதில் ஒரு பாடல்:

 

பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,

பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்!

வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத

கானம் கடந்து சென்றார்? – பாடல் 8; ஐந்திணை ஐம்பது

 

அன்புக்கு உரியவன் பிரிந்து சென்றுள்ளான். அவளின் உடல் வள்ளிக் கொடி வாடியிருப்பதனைப் போல் இருக்கின்றதாம்; வானம் பொழிய அந்தக் கொடி தழைக்கும்; அது போலத் தொலை தூரம் சென்ற அவனும் வாரானோ?   அவளும் பிழைப்பாளோ?

 

வள்ளிக் கொடிக்கு பூமிக்கு அடியினில்தான் சுவையான கிழங்கு இருக்கும். அந்தக் கிழங்கை நட்டு வைத்தால் அது வேர் பிடித்துப் பல்கிப் பெருகும். வள்ளிக்கு அதன் கிழங்கு முதல்! வள்ளி தழைக்க அப்போதைக்கு அப்போது நீர் தேவை. நீரிலேயே இருக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை!

 

சரி, இந்த வள்ளியின் கதை இப்பொழுது எதற்கு? இதோ அந்தக் குறள்:

 

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரிந் தற்று. – 1304; - புலவி

 

ஊடியவரை உணராமை = அவள் பொய்யாக ஊடிக் கொண்டுள்ளாள் என்பதனை நீ உணராமல் இருப்பது; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று = நீண்ட நாள்களாக நீர் இல்லாமல் வாடி இருக்கும் வள்ளிக் கொடியின் அடி வேரினையே பிய்த்து எரிவது போன்றது.

 

அவள் பொய்யாக ஊடிக் கொண்டுள்ளாள் என்பதனை நீ உணராமல் இருப்பது, நீண்ட நாள்களாக நீர் இல்லாமல் வாடி இருக்கும் வள்ளிக் கொடியின் அடி வேரினையே பிய்த்து எரிவது போன்றது.  

முதலில் உள்ள ஹைக்குவை மீண்டும் ஒருமுறை எட்டிப் பார்க்கவும்.

 

நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page