20/05/2024 (1171)
அன்பிற்கினியவர்களுக்கு:
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் …
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா …
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் … கவிஞர் வாலி, பணம் படைத்தவன், 1965
ஒருவர்க்கும் பயன் இல்லாதவன் இருந்தாலும் மறைந்தாலும் என்ன சொல்ல இயலும்?
எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன். – 1004; - நன்றியில் செல்வம்
ஒருவராலும் நச்சப்படாதவன் = “இவன் உதவியாக இருப்பான்” என்று யாராலுமே எண்ணப்படாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் = இந்த உலகில் விட்டுச் செல்வது என்னவாக இருக்க இயலும்? இவன் போல யாரும் இருக்கக் கூடாது என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை; ஓகாரம் – அசை.
“இவன் உதவியாக இருப்பான்” என்று யாராலுமே எண்ணப்படாதவன், இந்த உலகில் விட்டுச் செல்வது என்னவாக இருக்க இயலும்? “இவன் போல யாரும் இருக்கக் கூடாது” என்பதனைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் …
அடுத்த குறளைப் பார்ப்போம்.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல். – 1005; - நன்றியில் செல்வம்
கொடுப்பதும் துய்ப்பதும் இல்லார்க்கு = பிறர்க்கு உதவும் வகையினில் தம்மிடம் உள்ள செல்வத்தைக் கொடுக்காமலும், தாமும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாமலும் இருப்பவர்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் = அடுக்கடுக்காகச் செல்வம் கோடிக் கணக்கில் இருந்தாலும் இல்லாதவர்களே.
பிறர்க்கு உதவும் வகையினில் தம்மிடம் உள்ள செல்வத்தைக் கொடுக்காமலும், தாமும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாமலும் இருப்பவர்க்கு, அடுக்கடுக்காகச் செல்வம் கோடிக் கணக்கில் இருந்தாலும் இல்லாதவர்களே.
இந்தக் குறளை ஒட்டிய ஒரு கருத்து ஒரு பெரும் புலவரின் கற்பனையில் எப்படி விரிகிறது என்பதனை நாளைப் பார்ப்போம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
![](https://static.wixstatic.com/media/40c2397700984377a8d5a841d6b818ef.jpg/v1/fill/w_980,h_615,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/40c2397700984377a8d5a841d6b818ef.jpg)
Comments