24/11/2022 (630)
“கண்ணிற் சிறந்த உறுப்பில்லை; கொண்டானின்
துன்னிய கேளிர் பிறரில்லை; மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை; ஈன்றாளோ
டெண்ணக் கடவுளு மில்” ... நான்மணிக் கடிகை --- 55; விளம்பி நாகனார்
துன்னிய = நெருங்கிய
கண்ணைப்போல சிறந்த உருப்பில்லை; கணவனைப் போன்று நெருங்கிய உறவினர் மனைவிக்கு அமையாது; மக்கள் செல்வத்தைப் போல ஒரு செல்வம் பெற்றவர்களுக்கு கிடையாது; அம்மாவைவிட ஒரு தெய்வம் கிடையாது.
நான்மணிக்கடிகை நூற்றியொரு பாடல்களைக் கொண்டது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நான்கு மணியான கருத்துகளால் கோர்க்கப் பட்ட கடிகை (மாலையைப் போன்ற ஆபரனம்).
“பன்னிய மறையர் போலும் பாம்பரை யுடையர் போலுந்
துன்னிய சடையர் போலுந் தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும் மாதிடம் மகிழ்வர் போலும்
என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈச னாரே.” --- நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி 698 (4.72.2); திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த தேவாரம்.
துன்னிய சடையர் =நெருக்கமான சடையை உடையவர்
‘துன்னி’ என்றால் நெருக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
சரி, இந்தப் பாடல்கள் எல்லாம் எதற்கு என்கிறீர்களா?
“துன்னியார்” என்ற சொல்லுக்கு பொருள் விளங்கத்தான்.
“இடனறிந்து துன்னியார்” என்றல் “தக்க இடம் அறிந்து பகைவரை நெருங்குபவர்கள்”
அதுபோல நெருங்கி முற்றுகையிட்டுவிட்டால், நம்மைத் தாக்க வந்த மாற்றார் தங்கள் எண்ணம் மாறி சரணடைவர்.
“எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.” --- குறள் 494; அதிகாரம் – இடனறிதல்
இடனறிந்து துன்னியார் = தக்க இடத்தை அறிந்து செயல்படுபவர்; துன்னிச் செயின் = இன்னும் நெருங்கி செய்தால் (முற்றுகையைப் போட்டுவிட்டால்);
எண்ணியார் எண்ணம் இழப்பர் = நம்மைத் தாக்க வேண்டும் என்று வந்து கொண்டிருந்த மாற்றார் தங்கள் எண்ணத்தைக் கைவிடுவர்.
சும்மா ஒரு முற்றுகையைப் போட்டுவிட்டு உட்கார வேண்டியதுதான். தக்க இடம் மட்டும்தான் அமையனும். அப்புறம் வெற்றிதான்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comentários