25/09/2023 (933)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
செய்ந்நன்றியை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு பெரும் குறிப்புத் தருகிறார். ஆமாம், இது “ஓர் பெரும் குறிப்புதான்”!
இது நிற்க.
ஒரு, ஓர் என்ற சொல்கள் இடம்மாறி வந்து எப்படிப் பொருள்படும் என்பதைப் பார்ப்போம்.
நமக்குத் தெரியும், ஒரு என்ற சொல், வரும் சொல்லின் முதல் எழுத்தில் உயிர்மெய் இருந்தால் பயன்படுத்த வேண்டும்; ஓர் என்ற சொல்லை அடுத்து உயிர்வரின் பயன்படுத்த வேண்டும். உதாரணம்: ஒர் ஆள், ஒரு சொல்.
சில செய்யுள்களில் மாறி அமைந்திருக்கும். அது வழுவமைதியாகவும் இருக்கலாம். காண்க 19/09/2021 (208).
ஆனால், வேண்டுமென்றே மாற்றிப் பயன்படுத்தினால் அதில் ஒரு குறிப்பு இருக்கும்.
உதாரணம்: நாம் வழக்கத்தில் பயன்படுத்தும் சொலவடை “அவனெல்லாம் ஒரு ஆளா?” என்றால் “அவன் சரியானவன் இல்லை” என்று இழிவானப் பொருளைத் தரும். “ஒரு” என்றச் சொல்லை அடுத்து வரும் “ஆ” என்ற உயிருக்கு பயன்படுத்துகிறோம்.
“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து” --- குறள் 645; அதிகாரம்-சொல்வன்மை
இந்தக் குறளில் நம் பேராசான் “பிறிது ஓர் சொல்” என்கிறார். “ஒரு சொல்” என்பது பெரும்பான்மை வழக்கு. ஆனால், அதனை விடுத்து “ஓர்” என்று பயன்படுத்துவது அதனின் உயர்வு குறித்து. ஓர் சொல் என்றால் அதனைவிட உயர்வானச் சொல் இருக்கக் கூடாது என்னும் பொருளில்.
“அவரோர் தெய்வம்” என்றால் அவர் தெய்வத்திற்கு இணையானவர் என்று பொருள்படும்.
சரி, செய்ந்நன்றியை எவ்வாறு வெளிபடுத்துவது என்பதற்கு “ஓர் பெரும்” குறிப்பைப் பார்க்கலாம்!
அஃதாவது, நமக்கு ஒருவர் செய்த உதவியின் சிறப்பை எழு பிறப்பிற்கும் நினைக்க வேண்டுமாம்! வாழ்நாள் முழுவதும் நினைத்து செய்ந்நன்றி செய்தாலும் போதாது என்றார். காண்க 10/11/2021 (260). மீள்பார்வைக்காக:
“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.” --- குறள் 107; அதிகாரம் – செய்ந்நன்றியறிதல்
இதனைத் தொடர்ந்துவரும் இரு குறள்களையும் நாம் முன்பே சுவைத்துள்ளோம். காண்க 21/01/2021 (4), 06/05/2021 (109).
எந்த அறத்தை மறந்தாலும் பரவாயில்லை, ஒருவர் நமக்குச் செய்த நன்றியை மறந்தால் உன் கதி அதோ கதிதான் என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார்.
மகன் – ஆண்பால்; மகள் – பெண் பால்; மகர் = இரு பாலாருக்கும் பொது.
சிறுவன் – சிறுமி – சிறார்.
“மகர்” என்பது கடைப்போலியாய் “மகற்” என்றும் தோன்றும்.
இதற்கு எடுத்துக்காட்டுதான் இந்தக் குறள்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.” --- குறள் – 110; அதிகாரம் – செய்ந்நன்றியறிதல்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் = எந்த அறச்செய்ல்களைச் செய்யாமல் விட்டார்க்கும் கடைத்தேற வழி உண்டு; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை = (ஆனால்) ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உயர வழியே இல்லை.
எந்த அறச்செய்ல்களை செய்யாமல் விட்டார்க்கும் கடைத்தேற வழி உண்டு. ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உயர வழியே இல்லை.
இங்கே கூறப்படும் அறச்செயல்களைக் குறித்து ஆலத்தூர் கிழார் என்னும் பெருமானார் புறநானூற்றில் ஒரு பாடலில் விரிக்கிறார்.
“ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றோர்க் உய்தி யில்லென
அறம்பா டிற்றே யாயிழை கணவ ... “பாடல் 34 - புறநானூறு; ஆலத்தூர் கிழார்.
பால் கறக்கும் மாட்டின் முலையை அறுத்த அறனில்லாதவர்க்கும், மகளிர் கருவினையே சிதைத்த கொடியவர்க்கும், ஆசிரியர்களுக்குத் துரோகம் செய்தவர்களுக்கும்கூட கழுவாய் உள்ளது. ஆனால், செய்ந்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை என்கிறார் ஆலத்தூர் கிழார்.
இது செய்ந்நன்றி மறவாமையின் முக்கியத்துவம் குறித்து.
அதாங்க Attitude of gratitude. இதனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments