top of page
Search

எய்தற்கு அரிய ...489

17/11/2022 (623)

“ச்சே, அந்த சமயத்திலே அதை செய்திருந்தால், இப்போ நாம ராஜா/ராணி மாதிரி இருந்திருக்கலாம். விட்டுட்டோம். எப்பவும் தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கிற கதையாகவே இருக்கு நம்ம வாழ்க்கை.” என்று அலுத்துக் கொள்வது பலருக்கும் வாடிக்கைதான். பலர் என்ன பலர்? நானும் அடிக்கடி சிந்தித்ததுண்டு!


நம்மாளு: அது என்ன தும்பை விட்டுட்டு வாலைப் பிடிக்கிற கதை? தும்பியே ரொம்ப சின்னது. அதை மொத்தமாக பிடிக்க வேண்டியதுதானே?


தும்பு என்றால் பறக்கும் தும்பி அல்ல தம்பி! தும்பு என்பது தும்புக் கயிறு அல்லது மாட்டினைக் கட்டப் பயன்படுத்தப்படும் முக்கணாங் கயிறு. அதாவது, முக்கணாங்கயிறை சரியாகப் பிடிக்காமல் விட்டுட்டு அதன் வாலைப் பிடித்து நிறுத்த முயல்வதுதான் தும்பை விட்டுட்டு வாலைப் பிடிப்பது!


தும்பு என்றால் coir என்றும் பொருள். Coir (தும்பு) என்பது தேங்காயின் மேல் மட்டையில் இருந்து பிரிக்கபடும் நார். அதனை முறுக்கி உருவாக்குவதுதான் தும்புக் கயிறு.


தூம்பு என்றால் உள்துளை உள்ள பொருள். தூம்புகூட தும்பாகி இருக்கலாம். தும்பிக்கையிலும் துளை இருப்பது கவனிக்கத் தக்கது.


தும்பு எனும் சொல் பல விதத்தில் பயின்று வருகிறது. அந்தச் சொல் ஆராய்ச்சியைத் தனியாகத்தான் ஆராய வேண்டும் போல. இது நிற்க.


நாம் வாலை, இல்லை, இல்லை தும்பைப் பிடிக்கும் கதைக்கு வருவோம்.

அதாவது, சரியான காலம் வாய்க்கும்போது கவனமாக இருந்து செயலை முடிக்கவேண்டும் என்கிறார் நம் பேராசான் அடுத்தக் குறளில்.


நம்மாளு: அதைத்தானே எல்லாக் குறள்களிலும் சொல்கிறார். இதிலே என்ன வித்தியாசம்.


ஆசிரியர்: சில சமயம், அந்தக் காலம் எப்படி வாய்க்கும் என்றால் ‘பழம் நழுவி பாலில் விழுந்தக் கதை’யாக நம் முயற்சி சிறிதும் இல்லாமல் வந்து வாய்க்குமாம். அப்போது, அதை விட்டுவிடாது பயன்படுத்த வேண்டுமாம்.


நம்: சரியாகச் சொன்னீர்கள் ஐயா. சிந்தித்துப் பார்த்தால், பல சமயம் தானாக வந்த வாய்ப்புகளை உதாசீனப் படுத்திவிட்டு, ஏதோ ஒன்றிற்காக ஏங்கிக் கொண்டு இருப்போம்.


ஆசிரியர்: மிகச் சரி. அது போன்ற வாய்ப்புகள் அரிதாக வருமாம். அது அமையும் போது அச் செயலை முடிக்க வேண்டுமாம்.


எய்தற்கு அரிய இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல்.” --- குறள் 489; அதிகாரம் – காலமறிதல்


எய்தற்கு அரியது இயைந்தக்கால் = பகையை வெல்ல காத்திருக்கும் தலைவனுக்கு அந்தக் காலம் தானாக வந்து அமையுமானால், அது மிகவும் அரிது அல்லவா?; அந்நிலையே = அது கழிவதற்கு முன்பே; செய்தற்கு அரிய செயல் = மிகவும் கடினம் என்று நினைத்த செயலாகக்கூட இருக்கலாம். தக்க தருணம் அமைந்துவிட்டால் முடித்துவிட வேண்டும்.


பகையை வெல்லக் காத்திருக்கும் தலைவனுக்கு அந்தக் காலம் தானாக வந்து அமையுமானால், அது மிகவும் அரிது அல்லவா? ஆதலினால், அது கழிவதற்கு முன்பே, முடித்துவிட வேண்டும்.


இது பகைக்கு மட்டுமல்ல என்பது பெற்றாம்.


நன்றி. மீண்டும் சந்திப்போம்.


உங்கள் அன்பு மதிவாணன்.





Comments


Post: Blog2_Post
bottom of page