எல்லைக்கண் நின்றார் ... குறள் 806
28/12/2021 (307)
திருக்குறள் பதிவுகளுக்கு எனதருமை நண்பர் திரு. கோட்டீஸ்வரன் அவர்களும், மற்றுமொரு நண்பர் திரு ஆறுமுகம் அவர்களும் பின்னூட்டமாக அருமையான கருத்துகளை www.easythirukkural.com வளைத்தளத்தில் பதிவிடுகிறார்கள். நேரம் இருப்பின் வாசித்து மகிழத்தக்கது, பயன் பெறத்தக்கது.
நிற்க.
பேதைமை ஒன்றோ? என்று கேள்வி கேட்டு அதற்கு அழகான பதிலாக சிந்திக்கத்தக்க கருத்துகளை நம் பேராசான் குறள் 805ல் தெளிவுபடுத்தியிருந்தார்.
மேலும் தொடர்கிறார்.
நட்பு என்னும் வரம்பினுள் ஒன்றியிருப்பவர்கள், அவர்களின் நண்பர்களால் சில தொல்லைகள் ஏற்பட்டாலும் அந்த நட்பினைக் கைவிட மாட்டார்கள் என்று பொருள்படும்படி அடுத்து வரும் குறள் இருப்பதாக பல அறிஞர் பெருமக்கள் கூறுகிறார்கள்.
“எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.” --- குறள் 806; அதிகாரம் - பழைமை
எல்லைக்கண் நின்றார் = நட்பின் வரம்பினுள் நிற்பவர்கள்; தொல்லைக்கண் நின்றார் தொலைவிடத்தும் துறவார் = நண்பர்களினால் தொல்லைகள் தாம் தொலைந்து போகும்படி வந்தாலும் நட்பினை கை கழுவமாட்டார்கள்.
இந்த பொருள்கோள் முறையில்தான் மணக்குடவப் பெருமான், பரிமேலழகப் பெருமான், முத்தமிழ் அறிஞர் மு. வரதராசனார், கலைஞர் மு. கருணாநிதி, தமிழறிஞர் சாலமன் பாப்பையா உள்ளிட்டப் பலரும் பொருள் கண்டு இருக்கிறார்கள்.
இதிலிருந்து மாறுபட்டு புலவர் புலியூர் கேசிகன் அவர்கள் உரை காண்கிறார்.
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு தொலைவிடத்தும் எல்லைக்கண் நின்றார் துறவார் – என்ற பொருள்கோள் முறையை முன் வைக்கிறார்.
புலவர் புலியூர் கேசிகன் உரை: அறிவுடையவர், தமது தொல்லைகளின் போது உதவியாக நின்றவரின் தொடர்பை, அவர் தொலைவான இடங்களுக்குப் போனாலும் கூடக் கைவிட மாட்டார்கள்
இந்த உரையும் சிந்திக்கத்தக்கதாகவும், ஏற்புடையதாகவும் இருப்பதாக நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளைப் பகிரவும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
