28/02/2022 (367)
கண்ணுக்கு அருகில் ஒரு பொருளை எடுத்துச் சென்றால் அந்தப் பொருள் மட்டும் பெரிதாகத் தெரியும். அது மட்டுமல்ல, அந்தப் பொருள், அதன் பின் உள்ள மற்றப் பொருட்களையெல்லாம் மறைக்கும்.
இன்னும், கண்ணுக்கு அருகில் அந்தப் பொருளை எடுத்துச் சென்றால் அந்தப் பொருளும் மறைந்து விடும்.
‘அவள்’ கண்ணுக்கு மை எழுதிக் கொண்டு இருக்கிறாள். (கண்ணுக்கு மை தீட்டுதலை, மை எழுதுதல் என்கிறார்கள் அந்தக் காலத்தில்.). அப்போது, கவனிக்கிறாள், அந்த மை எழுதும் கோலைக் (pencil) காணவில்லை. ஆனால், அது அவளுக்கு மை தீட்டிக் கொண்டு இருக்கிறது. ஆச்சரியாமாக இருக்கிறது அவளுக்கு.
(அப்போதுதான் தோழி வருகிறாள்.)
அவள்: என்ன ஆச்சரியம்! இந்த மை எழுதும் கோல் இருக்கிறதே, அது கண்ணருகே கொண்டு செல்லும் போது மறைந்து விடுகிறது. அது போலத்தான், என்னவர் என் கண் அருகில் வரும்போது அவரின் குறைகளும் எனக்குத் தெரியாமல் போகின்றன. நீ என்ன நினைக்கிறாய்?
தோழி: நான் என்ன நினைக்க? நீயே கண்ணுக்கு அருகில் எடுத்துப் போவாயாம். அப்புறம் அது காணாமல் போய் விட்டது என்று சொல்வாயாம். உனக்கு பைத்தியமா என்றால் இதோ பாரு ஒரு குறள் என்பாயாம். சரி, என்ன குறள் வைத்துள்ளாய்?
“எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து.” … குறள் 1285; அதிகாரம் - 1285
எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் = கண்ணுக்கு மை எழுதும்போது இந்த மை எழுதும் கோல் காணாமல் போவது போல; கொண்கன் கண்ட இடத்து பழி காணேன் = என்னவரை அருகில் காணும் போது அவரின் தவறுகளை என்னால் காண முடியவில்லை
தோழி: அப்புறம்?
அவள்: இன்னும் ஒன்று சொல்ல வேண்டும் …
தோழி: இன்றைக்கு போதும் சாமி. நாளைக்கு பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments