ஏதின்மை ... 816, 443
10/01/2022 (319)
நேற்று ஒரு கேள்வி எழுந்தது எனக்கும். அதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா?
கொஞ்சம் பொறுங்க.
“பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.” --- குறள் 816; அதிகாரம் – தீ நட்பு
நேற்று பார்த்தக் குறள்தான் இது. இதில் ‘ஏதின்மை’ என்ற சொல்லுக்கு எப்படி பொருள் எடுப்பது என்பதுதான் அது.
மனக்குடவப் பெருமான், திருமிகு காலிங்கர், பரிமேலழகப் பெருமான் உள்ளிட்ட அனைத்துப் பெருமக்களிலிருந்து, தற்கால அறிஞர் பெருமக்கள் வரை ‘அறிவுடையார் ஏதின்மை’க்கு அறிவுடையார்கள் நொதுமல் அல்லது பகை என்று பொருள் கண்டு அதுவே, பேதையரின் தொடர்பைவிட ‘கோடி உறும்’ என்று பொருள் கண்டிருக்கிறார்கள்.
ஆனால், பெரியாரைத் துணை கோடல் எனும் அதிகாரதில் இருந்து ஒரு குறளை (குறள் 443) நாம் பார்த்துள்ளோம்.
“அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.” --- குறள் 443; அதிகாரம் - பெரியாரைத் துணைக்கோடல்
அறிவுடையவர்களைத் துணைக்கு கொள்ளுதல் ரொம்பவே சிறப்பு. அது ஒருவனைக் காப்பாற்ற வல்லது என்றும் பார்த்தோம்.
கொஞ்சம் குழப்பம். ஒரு பக்கம் நட்பு கொள் என்கிறார், இன்னொரு இடத்தில் பகை கோடி கொடுக்கும் என்கிறார். எதாவது ஒன்றைச் சொல்லுங்க ஐயா, என்பதைப் போல கேள்வி எழுகிறது.
சட்டத் துறையில் பொருள் கொள்ளும் முறை ஒன்று இருக்கிறது. அதை ‘Harmonious construction’ என்கிறார்கள். அதாவது ‘ஒத்திசைவாய் பொருள் கொள்ளுவது’ என்று.
முன்பு கண்ட கருத்திலிருந்து பின்பு வரும் ஒரு கருத்து மாறுபட்டு இருப்பது போலத் தோன்றினால், இரண்டையும் இணைத்து ஒத்திசைவாய் பொருள் கொள்ளும் முறைதான் அது.
இதற்கும் அதுவே துணை.
அதாவது, அறிவுடையார்கள் பகை கோடி கொடுக்கும் என்றால் நட்பு பல கோடி கொடுக்கும் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
மற்றொன்று, அறிவுடையார்கள் பகை என்பது நம்மை அழிக்காது. அவர்களுக்கு அந்த எண்ணமும் இருக்காது. சான்றோர்கள் அல்லவா? அதே சமயம், நமக்கு வழிகாட்டும், இடித்துச் சொல்லும். அதனால், நாம் திருந்த வழி இருக்கும். ஆகையால், அது ஒரு கோடி பெறும் என்று சொல்கிறார் என்று நான் கருதுகிறேன்.
நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க ப்ளிஸ்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
