19/08/2023 (897)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
“சொன்னாலும் செய்யமாட்டான்; அவனாகவும் தேறமாட்டான். இவன் உயிர் போகிறவரையில் இந்த பூமிக்கு ஒரு அதிசய வியாதிதான்! – யார் அவன்?”
என்ன ஆரம்பமே அதிரடியாக இருக்கு என்கிறீர்களா? யார் அந்தக் கேள்வியை எழுப்பினார்கள்? இது தானே உங்கள் கேள்வி?
நம்ம பேராசான் தாம் அந்த அதிரடி சரவெடியைப் போட்டது. யாருக்கு அப்படி ஒரு அதிர்வேட்டு என்றால் திரு. புல்லறிவாளருக்குத்தாம்!
“ஏவவுஞ் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.” --- குறள் 848; அதிகாரம் – புல்லறிவாண்மை
ஏவவும் செய்கலான் = சொன்னாலும் செய்யமாட்டான்; தான் தேறான் = தானாகவும் மீண்டு வரமாட்டான்; அவ்வுயிர் போ(ஒ)ம் அளவும் ஓர் நோய் = அந்தப் புல்லறிவு அவன் உயிர் போகும்வரை ஒரு கொல்லும் நோயாகவே இருக்கும்.
சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் மீண்டு வரமாட்டான். அந்தப் புல்லறிவு அவன் உயிர் போகும்வரை ஒரு கொல்லும் நோயாகவே இருக்கும்.
அதாங்க, அந்தப் புல்லறிவு என்னும் நோய் அவனைக் கொல்லாமல் விடாது.
இங்கே கவனிக்கத் தக்கது “நோய்” என்னும் சொல். நமக்குத் தெரியும் நோய் என்பது குணமடையக் கூடியது. பிணி என்பது எப்போதும் உடன் இருப்பது. நோய் என்றதனால் இந்த நோய்க்கு மருந்தாகிய நல்லறிவை நாடினால் சுகம் பெறலாம் என்பதும் தெளிவு.
திரு. புல்லறிவாளரும் திருவாளர் கூர்மதியராகலாம். எப்படி? அதற்கும் இரு வழிகளை இந்தக் குறளிலேயே குறிப்பால் காட்டுகிறார்.
என்ன செய்ய வேண்டும்? சான்றோர்களும், அந்தப் பாதையில் பயணித்தவர்களும் சொல்வதை உள்வாங்கிச் செயல்பட வேண்டும். அஃதாவது ஏவுஞ்செயல் செய்தல்.
இல்லையென்றால் தனக்குத் தெரியாததைத் தானே முயன்று கற்றல். அஃதாவது தானே தேறுவது அவ்வளவே.
இந்தக் குறளுக்கு அறிஞர் பெருமக்களின் மாறுபட்ட உரைகளையும் பார்ப்போம்.
புலவர் நன்னன்: சொன்னாலும் கேட்காமல், தானாகவும் தெரிந்து கொள்ளாமல் உள்ளவன் சாவும் வரை மக்கட்கு ஒரு நோய் போன்றவனே.
புலவர் குழந்தை: புல்லறிவாளன் தனக்கு உறுதியாயினவற்றை அறிவுடையார் செய்யென்று சொன்னாலும் செய்யமாட்டான். அதுவன்றித் தானாக இவை நல்லவை என்று அறியமாட்டான். அவன் சாகுமட்டும் உலகிற்கு ஒரு நோய் போல்வான்.
புலவர் வெற்றியழகனார்: பிறர் சொல்லுகின்ற நல்வழியினையும் ஏற்றுச் செயற்பட மாட்டான்; தானாகவும் உணர்ந்து நல்வழியில் நடக்க மாட்டான். அப்பேர்பட்டவனுடைய உடலில் உள்ள உயிர் அவனை விட்டு நீங்கும்வரை அவனே ஒரு நோயாவான்.
பரிமேலழகப் பெருமான்: புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவுஞ் செய்யான்; அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் யாக்கையின் நீங்கும் அளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கரியதொரு நோயாம்.
அஃதாவது, புல்லறிவாளன் இந்தப் பூமிக்கு நோயாகவும், பாரமாகவும் இருக்கிறான் என்பதை மேற்கண்ட அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்கிறார்கள்.
கலைஞர் மு. கருணாநிதி: சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.
புலவர் புலியூர் கேசிகன்: அறிவுடையோர் ‘இன்னின்னபடி செய்க’ என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான்.
மேற்கண்ட அறிஞர் பெருமக்கள் போன்றோர் புல்லறிவு என்பது ஒருவன் உயிர் நீங்கும்வரை நீங்கா நோயாக இருக்கும் என்கிறார்கள்.
மீண்டும் ஒரு எட்டு எட்டி அந்தத் திருக்குறளைப் படித்துவிட்டு எந்த உரை உங்களுக்கு ஏற்புடையாதாக இருக்கிறது என்பதைத் தெரிவியுங்கள்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments