10/07/2023 (858)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
பணம் ஒரு பாதுகாப்பு என்றார். யானைகளின் போரைப் போன்ற கடும் துன்பங்களைக்கூட உயரத்திலிருந்து ஒரு பார்வையாளனாக பார்க்கும் வாய்ப்பைக் கொடுக்கும் என்றார் குறள் 758 இல்.
எனவே, கொஞ்சம்கூட தாமதியாமல் பொருளைச் செய்ய வேண்டும் என்றும் அது பகைவரின் செருக்கை அழிக்கும் கூரிய ஆயுதம் என்றார். காண்க 29/01/2021 (12). மீள்பார்வைக்காக:
“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.” --- குறள் 759; அதிகாரம் - பொருள் செயல்வகை
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று மூன்று பால்களைக் கொண்ட நம் திருக்குறளை முப்பால் என்று அழைக்கிறோம். நடுநாயகமாக இருப்பது பொருள். பொருள் இருந்தால் ஏனைய இரண்டும் ஒரு சேர வருமாம். அதாவது, அறமும் இன்பமும் கிடைக்கும் என்கிறார். அதுவும் எப்படி? மிகவும் எளிமையாக, சிரமப்படாமல் கிடைக்குமாம்.
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவுரையாக பத்தாவது பாடலில் சொல்கிறார். அதாவது, சிறந்த பொருள் என்று அழைக்கப்படும் செல்வத்தை ரொம்ப மிகுதியாக ஈட்டியவர்க்கு அறமும் இன்பமும் இயற்றல் எளிது என்கிறார்.
“ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.” --- குறள் 760; அதிகாரம் – பொருள் செயல்வகை
ஒண் பொருள் = சிறந்த பொருள்; காழ்ப்ப = மிகுதியாக; எண் பொருள் = எளிதாக அமையும் பொருள்;
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு = அறவழியில் அன்பொடு சிறந்ததாகிய பொருளை மிகுதியாக உண்டாகியார்க்கு; ஏனை இரண்டும் ஒருங்கு எண்பொருள் = ஏனைய அறமும் இன்பமும் ஆகிய இரண்டும் ஒரு சேர எளிய பொருள்களாம்.
அறவழியில் அன்பொடு சிறந்ததாகிய பொருளை மிகுதியாக உண்டாகியார்க்கு ஏனைய அறமும் இன்பமும் ஆகிய இரண்டும் ஒரு சேர எளிய பொருள்களாம்.
ஆகவே அன்பொடும் அருளொடும் ஆகக்கூடிய அளவிலும் செய்க பொருளை!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Bình luận