06/07/2022 (495)
“பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்பது பழமொழி. இதைப் பற்றி நம் ஔவை பெருந்தகை சொன்ன பாடலை முன்பு ஒரு முறை பார்த்துள்ளோம். காண்க 07/07/2021. மீள்பார்வைக்காக:
“மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.” --- நல்வழி 26
மானம்; குலப்பெருமை (குலம்); படித்த கல்வி; நல்ல குணங்கள் (வண்மை); அறிவு; மற்றவங்களுக்கு கொடுக்கனுங்கிற நினைப்பு (தானம்); ஒழுக்க நெறி நிற்கனும் என்கிற முயற்சி (தவம்); உயர வேண்டும் என்ற முயற்சி (உயர்ச்சி); ஊக்கம் (தாளாண்மை); அதுக்கும் மேலே உயிர் உணர்வான காதல் உணர்ச்சி ஆகியவை காற்றில் பறக்குமாம்.
அதனால்தான் அதைப் பசிப்பிணி என்கிறோம். நோய் என்றால் குணமாகும். பிணி என்றால் நம்முடனே இருக்கும்.
1939 ல் இரண்டாம் உலகப் போர். அதைத் தொடர்ந்து நம் நாட்டில் பஞ்சம். அமெரிக்காவிலிருந்து கோதுமை நம் நாட்டிற்கு வந்தது. பசியைப் போக்க கட்டுபடியாகும் விலையில் கிடைக்க ‘மைதா’வைக் கண்டு பிடித்தார்கள்.
அப்போதுதான், மைதாவில் செய்யப்படும் “பரோட்டா” மிகவும் பிரபலமானது. தஞ்சையில் ஆசிரியராக பணியாற்றிய இராமையாதாஸ் (1914 – 1965) என்பவர் ஒரு அற்புதமானக் கவிஞர். 500 திரைஇசைப் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். பல படங்களுக்கு வசனங்களும் வடித்துள்ளார். அவரின் சில பாடல்கள்:
“எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…” --- மலைக்கள்ளன்
“கல்யாண சமையல் சாதம் …” --- பட்டினத்தில் பூதம்
1951ல் வெளிவந்த “சிங்காரி” எனும் படத்தில் தஞ்சை இராமையாதாஸ் அவர்கள் எழுதிய பாடல்:
“ஒரு சாண் வயிறே இல்லாட்டா - இந்த உலகத்தில் ஏது கலாட்டா ? அரிசிப் பஞ்சமே வராட்டா - நம்ம உசுரெ வாங்குமா பரோட்டா ? …” --- திரைப்படம் - சிங்காரி (1951); தஞ்சை இராமையாதாஸ்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், இந்தப் பாடலை திருக்குறளைப் போன்ற “தெருக்குறள்” என்று பாராட்டியுள்ளாராம். பஞ்சத்தினால் வந்த பரோட்டா நம் உயிரை வாங்குவதை உணர்ந்து எழுதியுள்ளார் கவிஞர்.
பரோட்டா சுவையிலே அதன் பின்னாடியே போயிட்டேன்.
சரி, சரி, என்ன இன்றைக்கு குறள் உண்டா இல்லையா?ன்னு கேட்கறீங்க அதானே?
வரப்போகிற குறளுக்கும் மேலே பார்த்த கருத்துகளுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. அதனை நாளை பார்க்கலாமா உங்களின் சம்மதத்துடன்?
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments