11/11/2021 (261)
ஒரு புதிர். ஒரு குன்றிலே ஏழு ஓட்டைகள். அது என்ன? கண்டுபிடிங்க. இல்லைன்னா கடைசி வரை படிங்க!
ஏழு என்பது ஒரு நிறைவெண்; ஆதலால் நீண்ட காலத்தைக் குறிப்பது என்கிறார் பேரறிஞர் தேவநேயப் பாவாணர்.
நம்ம வாழ்க்கையே ஒரு சுழற்சிதான். அதிலே ஏழு ஆண்டு சுழற்சியைக் கவனித்தால் நிறைய உண்மைகள் புரியும்.
எண் ஏழில் ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்யுது. ஏழு கண்டங்கள், ஏழு பெருங்கடல்கள், ஏழு நாட்கள், ஏழு சுவரங்கள், வானவில்லில் ஏழு நிறங்கள், ஏழு முழு கிரகங்கள், உலகில் ஏழு அதிசயங்கள் … இப்படி சொல்லிக்கிட்டேப் போகலாம். இது நிற்க.
அடுத்த கதை: ஆமை இருக்கு இல்லையா அதற்கு நான்கு கால்கள், ஒரு தலை…
ஆமாம், இது எனக்குத் தெரியாதா, இதை வேற சொல்லனுமா? அப்படின்னு கேட்பது எனக்கு கேட்குது, கொஞ்சம் பொறுங்க.
அந்த ஆமைக்கு ஏதாவது ஒரு ஆபத்து வந்தால் அது என்ன பண்ணுது, அந்த ஐந்து பாகங்களையும் உள்ளே இழுத்துக் கொண்டு தப்பிக்குது. பாருங்க, ஆமை 100 ஆண்டுகள் கடந்துகூட வாழுமாம்! 152 வயது வாழ்ந்த ஆமையை அறிவியல் பதிவு பண்ணி வைத்திருக்கு. ஆமைக்கு நல்லா மூச்சு விடத் தெரியுமாம்! அப்போ நமக்கெல்லாம் தெரியாதா? அப்படித்தான் சொல்றாங்க. அதற்குத்தான் மூச்சுப் பயிற்சி எல்லாம் கற்றுக் கொடுக்கிறார்கள். அவசியம் கற்றுக்கோங்க. இது நிற்க.
நாம குறளுக்கு வருவோம். அடக்கமுடைமை (13) என்ற அதிகாரத்தில் ஆறாவது குறள்:
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.” … குறள் 126; அதிகாரம் – அடக்கமுடைமை
ஆமைபோல் ஒருமையுள் ஐந்தடக்கல் ஆற்றின் = ஆமையைப் போல, ஒருவன் மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த ஐந்து புலன் களையும் அடக்கும் திறமை வந்துவிட்டால்; எழுமையும் ஏமாப்பு உடைத்து = (அந்தத் திறமை) அவனுக்கு ஏழு பிறப்புக்கும் பாதுகாப்பாக இருக்கும்; ஏமாப்பு = பாதுகாப்பு; எழுமை = நீண்(ண்ண்)ட காலத்திற்கு, காலம் கடந்தும் (extended time) – இது உயர்வு நவிற்சி அணி. (உண்மையாகக்கூட ஆகலாம்)
அப்போ, அடக்கம் என்றால் ஐந்தையும் அடக்குவதுதான் போல!
சரி, முதலில் சொன்ன புதிருக்கு என்ன பதில்? ன்னு கேட்கறீங்க ...
நம்ம ‘தலை’தான். காது (2), கண் (2), மூக்கு (2), வாய்(1) – தலையிலேயும் ஏழு ஓட்டை!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments