07/10/2023 (945)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
அடக்கத்திற்கு, அடங்குவதற்குக் குறியீடாக ஆமையாரைப் பைந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடுவது ஏன்? என்ற கேள்வியோடு நிறுத்தியிருந்தோம்.
ஆமையை யாராவது தீண்டினால் தன் நான்கு கால்களையும் அதன் ஒரு தலையையும் உடனே தன் ஓட்டினுள் இழுத்துக் கொள்ளும். அதற்குப்பின், நீங்கள் என்ன செய்தாலும் அது வெளியே தலையையும் காட்டாது; காலையும் நீட்டாது. அது தன்மட்டில் அமைதியாகவே இருந்து கொள்ளும். அதன் அமைப்பு எப்போதும் ஒருமித்தே இருக்கும், இயங்கும்.
அதன் இதயம் எப்போதும் ஒரே சீராகவும் இயங்குமாம்!
அதனால், ஒருமித்து இயங்குவதற்கு ஆமையாரைப் போல ஒரு உவமை இருக்க இயலாது என்கிறார்கள்.
திருமூலப் பெருமான், திருமந்திரத்தில் ஆமையாரைப் பயன்படுத்தி உபதேசம் செய்கிறார்:
“பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வாரார்
ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி
இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.” --- பாடல் 133, முதல் தந்திரம் – உபதேசம், திருமந்திரம், திருமூலப் பெருமான் .
திருமூலப் பெருமான் ஒரு கேள்வியைக் கேட்டு அவரே அதற்குப் பதிலையும் உபதேசமாய் அருளிச் செய்கிறார்.
கேள்வி: பெருமை, சிறுமை என்று பிரித்தறியும் எம்பிரான் போல் அருமையையும் எளிமையையும் அறிய வல்லவர் யார் யார்?
பதில்: ஒருமையுள் ஆமைபோல் உள்ளே ஐந்துப் புலன்களையும் அடக்கி நல்வினை, தீ வினை இரண்டனையும் தீண்டாமல், குற்றமில்லாது இருப்பவர்கள்தாம் என்கிறார்.
“இருள்சேர் இருவினையும் சேரா...” என்றார் வள்ளுவப் பெருமானும் குறள் 5 இல்.
சீவக சிந்தாமணியில் திருத்தக்கத் தேவர்பிரான், கீழ் வரும் பாடலில் வள்ளுவப் பெருந்தகையின் அடியொற்றி ஆமையாரையே அதே பொருளில் கையாள்கிறார். யாமை = ஆமை
“ஐவகைப் பொறியும் வாட்டி
யாமையி னடங்கி யைந்தின்
மெய்வகை தெரியுஞ் சிந்தை
விளக்குநின் றெரிய விட்டுப்
பொய்கொலை களவு காம
மவாவிருள் புகாது போற்றிச்
செய்தவ நுனித்த சீலக்
கனைகதிர்த் திங்க ளொப்பார்.” --- பாடல் 2324; சீவக சிந்தாமணி, திருதக்கத் தேவர்பிரான்.
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.” … குறள் 126; அதிகாரம் – அடக்கமுடைமை
இந்த உபதேசக் கருத்தை ஒருமுறை கற்றுவிட்டால்? காண்க 09/11/2021(259). மீள்பார்வைக்காக:
“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப்பு உடைத்து.” --- குறள் 398; அதிகாரம் – கல்வி
மேற்கண்ட இரு குறள்களில்தான் “எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்று இரண்டாவது அடியை அப்படியே பயன்படுத்துகிறார்.
அடக்கமுடைமை அனைத்திற்கும் திறவுகோல்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் மதிவாணன்.
コメント