29/10/2023 (967)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
ஒழுக்கக் கூறுகளைச் சொல்லிக் கொண்டுவரும் நம் பேராசான் பொறையுடைமையைக் குறித்து சொல்லிக் கொண்டு வருகிறார்.
“மறப்போம்; மன்னிப்போம்” இதுதான் நம் பேராசான் சொல்வது.
அறிஞர் அண்ணா அவர்களைத் தன் உடன் இருந்த சிலர் பிரிந்து சென்று இழி மொழிகளைச் சொல்லி ஏசுகிறார்கள். அவர்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி மண்ணை வாரித் தூற்றுகிறார்கள். அதைக் கண்ட தம்பிகள் அறிஞர் அண்ணாவைப் பதில் அளிக்கத் தூண்டுகிறார்கள். அதற்கு அறிஞர் அண்ணா அவர்கள்:
“தம்பி, ஷேக்ஸ்பியர் நாடகம் ஜூலியஸ் சீசர் படிச்சோமே, வெறும் பாடமாகவாப் படிச்சோம்? படிப்பினைன்னு நினைச்சுதானே படிச்சோம். நீயுமா புரூட்டஸ்ன்னு சீசர் கேட்டான். நானும் நீயுமா தம்பி என்று கேட்கணுமா? நான் கேட்கவில்லை. கேட்கமாட்டேன். என்னா நான் சீசரில்லை வெறும் அண்ணாதுரை!” என்றார்.
இங்கே கவனிக்க வேண்டியது, என்னவென்றால் “நான் சீசரில்லை”; மிகச் சாதாரணமானவன் என்பதுதான். “நான் மிகச் சாதாரணமானவன்” என்ற மனப்பக்குவத்தைப் பல நிலைகளில் வெளிப்படுத்தியவர் அவர்.
அந்த அடக்கம், பணிவு, பொறுமை அறிஞர் அண்ணாவிடம் இறுதிவரை இருந்ததை அவர் எதிரிகளும் ஏற்றுக் கொள்வர்.
மறை நூல்களெல்லாம், ‘மன்னியுங்கள், மன்னித்து விடுங்கள்’ என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன.
அருளாளர்கள் எல்லாம் “இறைவனிடம் நாம் மன்னிப்பை அழுது தொழுது வேண்டும் போது, நாமும் நமக்குத் தீங்கு செய்தவர்களைப் பொறுத்து மன்னிக்க வேண்டும்” என்கிறார்கள்.
திருப்பித் தாக்குவது அந்தக் கணம், அன்றைய தினம் வேண்டுமானால் இன்பம் அளிக்கலாம். ஆனால் பொறுத்தவர்க்கோ அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
“ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.” --- குறள் 156; அதிகாரம் – பொறையுடைமை
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் = தீங்கு செய்தவர்களைப் பழி வாங்குவது என்பது ஒரு நாளைக்கு வேண்டுமானால் இன்பம் பயக்கலாம்; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் = ஆனால், அதனைப் பொறுத்தவர்களுக்கோ என்றும் நீங்காத, நிலைத்தப் புகழ் இருக்கும்.
தீங்கு செய்தவர்களைப் பழி வாங்குவது என்பது ஒரு நாளைக்கு வேண்டுமானால் இன்பம் பயக்கலாம். ஆனால், அதனைப் பொறுத்தவர்களுக்கோ என்றும் நீங்காத, நிலைத்தப் புகழ் இருக்கும்.
பொறுப்போம்; மறப்போம்; மன்னிப்போம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Komentarze